ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர சீனியர் வீரர் செட்டேஸ்வர் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகிய இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுவாகவே மெதுவாக விளையாடும் ஸ்டைலை கொண்ட புஜாரா 2010 முதல் பெரும்பாலான போட்டிகளில் நங்கூரமாக நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களை குவித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்.
குறிப்பாக 2019/20 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் 2020/21 தொடரிலும் பெரிய ரன்களை எடுக்கவில்லை என்றாலும் உடம்பில் அடி வாங்கி முக்கிய ரன்களை எடுத்து வெற்றிகளில் பங்காற்றினார். இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்ததால் கடந்த 2022 பிப்ரவரியில் அதிரடியாக நீக்கப்பட்ட அவருடைய கேரியர் முடிந்ததாக கருதப்பட்டது.
கம்பேக் நிகழுமா:
ஆனால் மனம் தளராமல் கவுண்டி தொடரில் பெரிய ரன்களை குவித்த அவர் 2022 ஜூலை மாதமே இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் கம்பேக் கொடுத்தார். அதில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்ட அவர் கடந்த டிசம்பரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதமடித்து கடந்த பிப்ரவரி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தார். இருப்பினும் மீண்டும் கவுண்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஃபைனலில் சொதப்பியதால் தற்போது 2வது முறையாக நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அதே ஃபைனலில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் சுமாராக செயல்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இல்லாததால் யார் கேட்க போகிறார்கள் என்ற நோக்கத்தில் புஜாரா மட்டும் பலிகாடாக கழற்றி விடப்பட்டதாக சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் எவ்விதமான எதிர்ப்புகளும் தெரிவிக்காத புஜாரா அடுத்த நாளே பயிற்சிகளை துவங்கி தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.
குறிப்பாக ஜூலை 5ஆம் தேதி துவங்கிய மத்திய மண்டலத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு மண்டலம் 220 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 28 (102) ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அதிகபட்சமாக அதித் சேத் 74 ரன்கள் எடுக்க மத்திய மண்டலம் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சிவம் மாவி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய மத்திய மண்டலம் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 128 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் 48 (69) ரன்கள் எடுக்க மேற்கு மண்டலம் சார்பில் அதிகபட்சமாக நாகஸ்வாலா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கு மண்டலம் அணிக்கு பிரிதிவி ஷா 25, கேப்டன் ப்ரியங் பஞ்சால் 15 என தொடக்க வீரர்கள் பெரிய ரண்களை எடுக்கத் தவறிய போதிலும் 3வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்து 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய சூரியகுமார் யாதவ் 52 (58) ரன்களில் அவுட்டானார்.
ஆனால் மறுபுறம் வழக்கம் போல நங்கூரத்தை போட்ட புஜாரா தமது ஸ்டைலில் பேட்டிங் செய்து சதமடித்து 16 பவுண்டரி 1 சிக்சருடன் 133 (278) ரன்கள் குவித்து 9வது விக்கெட்டாக அவுட்டானார். அவரது சிறப்பான ஆட்டத்தால் 3வது நாள் முடிவில் 291/9 ரன்கள் எடுத்துள்ள மேற்கு மண்டலம் 383 ரன்கள் முன்னிலையுடன் வெற்றி பெறும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.
இதையும் படிங்க:Ashes 2023 : அட்டகாசமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே படைக்காத தனித்துவ உலக சாதனை
மேலும் முதல் தர கிரிக்கெட்டில் தம்முடைய 60வது சதத்தை அடித்து சச்சின், கவாஸ்கர் ஆகியோரது சாதனைகளை சமன் செய்த புஜாரா அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி இந்தியாவுக்காக மீண்டும் கம்பேக் கொடுக்கும் போராட்டத்தை துவங்கியுள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்/சுனில் கவாஸ்கர் : தலா 80
2. ராகுல் டிராவிட் : 68
3. செட்டேஸ்வர் புஜாரா : 60*