ஐபிஎல் 2024 : சென்னைக்கு மீண்டும் அதிர்ஷ்டம்? பிளே ஆஃப் சுற்று அட்டவணை பற்றி வெளியான தகவல்

CSK Chepauk
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு ஐபிஎல் 2024 டி20 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் துவங்கியது. வரலாற்றில் 17வது முறையாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் பெங்களூருவை தோற்கடித்த நடப்பு சாம்பியன் சென்னை கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. குறிப்பாக தோனிக்கு பதிலாக கேப்டனாக பொறுப்பேற்ற ருதுராஜ் தலைமையில் சென்னை முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லியை பஞ்சாப் அணியும் மூன்றாவது போட்டியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தாவும் வீழ்த்தின. அந்த வகையில் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ள 2024 ஐபிஎல் தொடரின் இடையே இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் ஏற்கனவே முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது.

- Advertisement -

சென்னைக்கு அதிர்ஷ்டம்:
மேலும் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி எஞ்சிய ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்குகிறது. எனவே அதை மையப்படுத்தி தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கான அட்டவணையை பிசிசிஐ வடிவமைக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதன் படி 2024 நாடாளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் காரணமாக சென்னையில் முன்கூட்டியே வாக்குப்பதிவு முடிந்து விடும் என்பதால் அங்கு 2 பிளே ஆஃப் சுற்று போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஆரம்பத்திலேயே வாக்குப்பதிவு முடிந்து விடும் என்பதால் சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

- Advertisement -

எனவே பிளே ஆஃப் சுற்றின் குவாலிபயர் 1 போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல மே 26ஆம் தேதி நடைபெற உள்ள மாபெரும் இறுதிப்போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று பிடிஐ இணையத்தில் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி உறுதி செய்துள்ளார். அதே சமயம் கடந்த வருடம் ஃபைனல் உள்ளிட்ட முக்கிய போட்டிகளை நடத்திய குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் இம்முறை எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 ஆகிய 2 போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: இருக்கையை அடிக்க சென்ற ரிஷப் பண்ட்.. சமாதானம் செய்த ரிக்கி பாண்டிங் – நடந்தது என்ன?

அந்த வகையில் 2024 ஐபிஎல் தொடரின் துவக்க போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற சென்னைக்கு தற்போது இறுதிப் போட்டியை நடத்தும் அதிர்ஷ்டமும் கிடைத்துள்ளது தமிழக ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே லீக் சுற்றில் அசத்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் பட்சத்தில் தங்களுடைய சொந்த மண்ணிலேயே விளையாடி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement