ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் செப்டம்பர் 9ஆம் தேதி துவங்குகிறது. 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. எனவே அந்த உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் நோக்கத்தில் இம்முறை ஆசியக் கோப்பை டி20 போட்டிகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன் படி அனைத்து போட்டிகளிலும் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் ஐக்கிய அரபு நாடுகள், பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளுடன் லீக் சுற்றில் விளையாட உள்ளன.
அட்டவணையில் மாற்றம்:
அந்தப் போட்டிகள் வரும் செப்டம்பர் 10, 14 மற்றும் 19ஆம் தேதிகளில் முறையே துபாய், துபாய், அபுதாபி மைதானங்களில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2025 ஆசியக் கோப்பை அட்டவணையில் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அறிவித்துள்ளது. அதாவது உள்ளூர் நேரப்படி ஆசியக் கோப்பை போட்டிகள் 6:00 மணிக்கு துவங்குவதாக இருந்தன.
ஆனால் அந்த நேரத்தில் அங்கே அதிகப்படியான வெப்பம் இருப்பது வழக்கமாகும். அதனால் வீரர்கள் பெரிய சிரமத்தை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே ஆசியக் கோப்பை போட்டிகள் அரை மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு என்று ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரசிகர்களுக்கு பின்னடைவு:
குறிப்பாக செப்டம்பர் 15ஆம் தேதி அபுதாபியில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் அணிகள் மோதும் போட்டி மட்டும் மாலை 4.00 மணிக்கு (இந்திய நேரப்படி 5.30) மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஃபைனல் உட்பட மற்ற அனைத்து போட்டிகளும் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்று ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அறிவித்துள்ளது. அப்படி பார்த்தால் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு துவங்க உள்ளது.
இதையும் படிங்க: சிஎஸ்கே அணியின் ஓஜி.. உங்களோட இதை செஞ்சது கெளரவம் அண்ணா.. அஸ்வினை வாழ்த்திய ருதுராஜ்
இந்த மாற்றம் இந்திய ரசிகர்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 8 மணிக்கு துவங்கும் போட்டிகள் முடிவடைவதற்கு இரவு 11 முதல் 11.30 மணியாகும். அதிலும் சூப்பர் ஓவர் நடந்தால் போட்டி முடிய 12 மணி தாண்டி விடும். அதனால் இந்திய ரசிகர்கள் ஆசியக் கோப்பை போட்டிகளை பார்த்து விட்டு உறங்குவதற்கு மிகவும் தாமதம் ஏற்படும் என்றே சொல்லலாம்.



