ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏப்ரல் 30ஆம் தேதி சேப்பாக்கத்தில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை வெறும் 2 வெற்றி 7 தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதன் காரணமாக இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறுவதற்கு சென்னை அணி தயாராகி வருகிறது.
அதே சமயம் இங்கிருந்து சென்னை ஆறுதல் வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்குமா? என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மறுபுறம் 9 போட்டிகளில் பஞ்சாப் 5 வெற்றிகளைப் பெற்று நன்றாக விளையாடி வருகிறது. அதனால் இந்தப் போட்டியில் சென்னையை தோற்கடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அதிகரிக்க பஞ்சாப் தயாராகியுள்ளது.
தல தோனியின் பரிசு:
இந்நிலையில் இந்தப் போட்டிக்கு தயாராக சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது சிஎஸ்கே கேப்டன் தோனியை பஞ்சாப் வீரர் சஹால் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது தமக்கு ஒரு பேட்டை பரிசாகக் கொடுங்கள் என்று தோனியிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காத தோனி தன்னுடைய ஒரு பேட்டை பரிசாக கொடுத்துள்ளார்.
அதை வாங்கிய சஹால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பஞ்சாப் அணியின் உடைமாற்றும் அறைக்குள் சென்றார். அங்கே தோனியின் பேட்டால் பந்தை அடிப்பது போல் சஹால் நடந்து கொண்டே மகிழ்ச்சியாக சென்றார். அதைப் பார்த்த கிளன் மேக்ஸ்வெல் இது யாருடைய பேட்? தோனியுடையதா? என்று கேட்டார். அதற்கு சஹால் “ஆம்” என்று சொன்னதும் இதை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மேக்ஸ்வெல் கலாய்த்தார்.
கலாய்த்த மேக்ஸ்வெல்:
அதற்கு “பேட்டிங் செய்யப் போகிறேன்” என்று சஹால் மீண்டும் பந்தையடிப்பது போல் செய்து காட்டிக்கொண்டே பதில் கொடுத்தார். அதற்கு “ஒவ்வொரு போட்டியிலும் இம்பேக்ட் வீரராக பவுலராக மட்டுமே விளையாடும் நீங்கள் எப்படி பேட்டிங் செய்வீர்கள்?” என்று சொல்லி மீண்டும் மேக்ஸ்வெல் கலாய்த்தார். அதையெல்லாம் கண்டுகொள்ளாத சஹால் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தப் பேட்டை பாதுகாப்பாக தம்முடைய கையில் வைத்து பூட்டினார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்தை அவமானப்படுத்திய அப்ரிடி.. தவான் நெத்தியடி பதில்.. மீண்டும் கலாய்த்ததால் ரசிகர்கள் கோபம்
அதைப் பார்த்த இளம் பஞ்சாப் வீரர் பிரின்ஸ் யாதவ் “உங்களுடைய சொந்த ஊரான ஹரியானாவில் ஏதேனும் ஒரு குழந்தை கண்டிப்பாக இந்த பேட்டை எடுத்துக் கொள்ளப்போகிறது” என்று சஹாலிடம் சொன்னார். முன்னதாக இந்திய அணியில் விளையாடிய போது தாம் வெற்றிகரமாக செயல்பட தோனி விக்கெட் கீப்பராக நிறைய ஆதரவு கொடுத்ததாக சஹால் பலமுறை கூறியது குறிப்பிடத்தக்கது.



