
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அத்தொடரில் தெம்பா பவுமா தலைமையிலான உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாபிரிக்கா களமிறங்குகிறது. எனவே வலுவான தென்னாப்பிரிக்காவை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
முன்னதாக அத்தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். 2023 உலகக்கோப்பையில் காயத்துடன் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் கடந்த ஆஸ்திரேலியா தொடர் வரை விளையாட முடியவில்லை.
இறுதியாக குணமடைந்த ஷமி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடி 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்காற்றினார். ஆனால் அப்போதிலிருந்து ஷமி ஃபிட்டாக இல்லை என்று சொல்லி இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் தேர்வுக்குழு கழற்றி விட்டது. இத்தனைக்கும் 2025/26 ரஞ்சிக் கோப்பையில் பெங்கால் அணிக்காக முதல் 2 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்த ஷமி அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற முக்கிய பங்காற்றினார்.
அது பற்றி கேட்டதற்கு ஃபிட்டாக இல்லாத காரணத்தாலேயே கடந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஷமி தேர்வாகவில்லை என்று தேர்வுக்குழு அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாலேயே ஷமிக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை என்று கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஷமி போன்ற தரமான பவுலர் எளிதாக கிடைக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அதே சமயம் நீங்கள் தற்சமயத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பவுலர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் எங்களுக்காக நல்ல வேலையைச் செய்துள்ளார்கள். உங்களால் ஆகாஷ் தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா போன்றவரின் ஆட்டத்தைத் தவிர்க்க முடியாது. சிராஜ், பும்ரா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்ன செய்கிறார்கள் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்”
இதையும் படிங்க: இன்னும் 15 ரன்கள் தான் தேவை.. 18 ஆவது இந்திய வீரராக மாபெரும் சாதனை நிகழ்த்தப்போகும் – கே.எல் ராகுல்
“அதனால் சில நேரங்களில் ஷமி பாய் போன்றவர்கள் வாய்ப்பைத் தவற விடுவது கடினமானதாகும். அடுத்ததாக என்ன தொடர் நடைபெற உள்ளது, அதற்காக நாம் எப்படி திட்டமிட வேண்டும்? என்றவற்றைத் தெரிந்து கொள்வது எங்களுக்கு முக்கியம். அதற்காக எம்மாதிரியான வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பது முக்கியம். ஷமியின் ஃபிட்னஸ் பொறுத்த வரை உங்களுக்கு தேர்வாளர்கள் இன்னும் தெளிவான விளக்கத்தைக் கொடுப்பார்கள்” என்று கூறினார்.