முடியும் சகாப்தம், டேவிட் வார்னர் திடீர் ஓய்வு பெறுகிறாரா? அவருடைய மனைவியின் சோகமான பதிவு இதோ

David Warner Candice
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்ட இங்கிலாந்து விமர்சனத்திற்குள்ளானது. இருப்பினும் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஹெண்டிங்க்லே நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து கடுமையாக போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆஷஸ் கௌரவத்தை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் 105 டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்கள் உட்பட 8247 ரன்களை எடுத்து ஜாம்பவானாக போற்றப்படும் தரமானவர் என்றாலும் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2021க்குப்பின் சதமடிக்க முடியாமல் தடுமாறி வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரராக சரித்திர சாதனை படைத்து வெறித்தனமாக கொண்டாடி காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

ஓய்வு பெறும் வார்னர்:
அந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் சுமாராக செயல்பட்டு காயமடைந்து வெளியேறிய அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தடுமாற்றமாக செயல்பட்டார். அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் இந்த ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் வரும் 2024 ஜனவரியில் சொந்த மண்ணில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த சூழ்நிலையில் இந்த தொடரில் ஆரம்பம் முதலே தடுமாறிய அவர் ஸ்டுவர்ட் ப்ராடுக்கு எதிராக மீண்டும் பெட்டி பாம்பாக அடங்கி வருகிறார்.

அதன் உச்சகட்டமாக 3வது போட்டியில் 2 இன்னிங்ஸிலும் அவரிடம் அவுட்டான வார்னர் மொத்தமாக 17 முறை அவுட்டாகி கிண்டல்களுக்கும் உள்ளாகியுள்ளார். அதனால் அவரை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வட்டாரத்தில் விமர்சனங்கள் மீண்டும் உச்சகட்டமாக எழுந்துள்ள நிலையில் அதே 3வது போட்டியில் 3 வருடம் கழித்து வாய்ப்பு பெற்ற மிட்சேல் மார்ஷ் 118 (118) ரன்களை விளாசி 2 விக்கெட்களையும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தினார். அதே போல மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயத்திலிருந்து குணமடைந்து அடுத்த போட்டிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதனால் 4வது போட்டியில் மிட்சேல் மார்ஷை தொடக்க வீரராக களமிறக்க திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியா வார்னரை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. சொல்லப்போனால் அதைப்பற்றி கேப்டன் பட் கம்மின்ஸ் 3வது போட்டியின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் மறைமுகமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டேவிட் வார்னரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அவருடைய மனைவி கேண்டீஸ் வார்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக அடுத்த போட்டி மட்டுமல்லாமல் இனி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்த்தும் வகையில் அவருடைய பதிவு அமைந்துள்ளது. இது பற்றி ஹெண்டிங்க்லே நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எங்களின் ஒரு சகாப்தத்தின் முடிவு வந்துள்ளது. இது வேடிக்கையாக இருக்கிறது. இருப்பினும் உங்களுடைய மகள்கள் உங்களுக்கு எப்போதும் மிகப் பெரிய ஆதரவாளர்களாக இருப்பார்கள். லவ் யூ டேவிட் வார்னர்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:வீடியோ : சூப்பர்மேன் கேட்ச், ஒரே ஓவரில் 32 ரன்கள் – தனி ஒருவனாக திண்டுக்கலை நொறுக்கிய நெல்லையின் ஈஸ்வரன்

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் இனி விளையாடுவதை பார்ப்பது மிகவும் கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2024 டி20 உலக கோப்பையுடன் மொத்தமாக ஓய்வு பெற உள்ளதாக ஏற்கனவே தெரிவித்த வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெறுவது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement