நழுவிப்போன 22 ரன்ஸ்.. அசட்டு தைரியத்தால் குறைத்து எடைப்போடும் ஆஸி? இந்தியா போல சாதிக்குமா வெ.இ

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி ஜனவரி 26ஆம் தேதி புகழ்பெற்ற பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

இளஞ்சிவப்பு நிற பந்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள் குவித்து அசத்தியது. குறிப்பாக கிரைக் ப்ரத்வெய்ட் 4, டக்நரேன் சந்தர்பால் 21, கிர்க் மெக்கன்சி 21, அலிக் அதனேஷ் 8, ஜஸ்டின் க்ரீவ்ஸ் 6 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 64/5 என தடுமாறிய அந்த அணி 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்தியா போல:
இருப்பினும் காவெம் ஹோட்ஜ் 71, ஜோஸ்வா டா சில்வா 79, கெவின் சின்க்ளைர் 50, அல்சாரி ஜோசப் 32 ரன்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸை காப்பாற்றினர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்கள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் 6, லபுஸ்ஷேன் 3, கேமரூன் க்ரீன் 8, டிராவிஸ் ஹெட் 0 என முக்கிய பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி வெஸ்ட் இண்டீஸ் தெறிக்க விட்டது.

அதனால் 24/4 என ஆரம்பத்திலேயே திணறிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர் உஸ்மான் கவாஜா நிதானமாக விளையாடி 75 ரன்களும் அலெக்ஸ் கேரி 65 ரன்களும் எடுத்தனர். அப்போது வந்த கேப்டன் பட் கமின்ஸ் தன்னுடைய அணியை சரிய விடாமல் முக்கியமான 64* ரன்கள் அடித்ததால் ஆஸ்திரேலியா 289/9 ரன்கள் எடுத்து நல்ல நிலையை எட்டியது. ஆனால் அப்போது திடீரென 22 ரன்கள் பின்தங்கியிருந்தும் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தைரியமாக டிக்ளேர் செய்வதாக அறிவித்து ஆச்சரியத்தை கொடுத்தது.

- Advertisement -

குறிப்பாக கத்துக்குட்டியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸை குறைத்து எடை போட்ட ஆஸ்திரேலியா 2வது நாள் இரவு வேளையில் பிங்க் பந்தை ஸ்விங் செய்து தெறிக்க விடலாம் என்ற அசட்டு தைரியத்துடன் டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4, கிமர் ரோச் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா பரிசாக கொடுத்த 22 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2வது நாள் முடிவில் 13/1 ரன்கள் எடுத்து 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 3வது இடத்தில் டிராவிட், புஜாரா மாதிரி வரணும்ன்னா.. அதை செய்ங்க.. தடுமாறும் கில்லுக்கு கும்ப்ளே ஆலோசனை

அதனால் தற்சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. குறிப்பாக 300 ரன்களை இலக்காக நிர்ணயித்து பந்து வீச்சிலும் அசத்தும் பட்சத்தில் 35 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை அதனுடைய கோட்டையான காபா மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோற்கடிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில் ஒருவேளை இப்போட்டியில் வென்றால் கடந்த 35 வருடங்களில் இந்தியாவுக்கு பின் (2021) ஆஸ்திரேலியாவை காபா மைதானத்தில் தோற்கடித்த 2வது அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement