இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடர் வரும் நவம்பர் மாதம் பெர்த் நகரில் துவங்குகிறது. கடைசியாக இந்தியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது.
எனவே இம்முறை இந்தியாவை எப்படியாவது வீழ்த்தி அந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா இப்போதே தயாராகி வருகிறது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டங்களை வென்றது. அதே போல பார்டர் – கவாஸ்கர் கோப்பையும் வெல்வோம் என்று கேப்டன் பட் கமின்ஸ் கடந்த மாதம் கூறியிருந்தார்.
காயத்தால் விலகல்:
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் சமீபத்தில் முதுகு பகுதியில் காயத்தை சந்தித்திருந்தார். ஆனால் இன்னும் ஒரு மாதம் இருப்பதால் அதற்குள் குணமடைந்து இந்திய தொடரில் அவர் விளையாடுவார் என்று செய்திகள் வெளியானது. அதே சமயம் முதுகில் காயத்தை சந்தித்ததால் கேமரூன் கிரீன் பந்து வீசாமல் முழுமையான பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார் என்று செய்திகள் தெரிவித்தன.
அதனால் நவம்பர் மாத துவக்கத்தில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவர் ஆஸ்திரேலியா ஏ அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் சந்தித்த காயத்துக்காக நியூசிலாந்துக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த அறுவை சிகிச்சை செய்தால் குணமடைய 2 – 3 மாதங்கள் தேவைப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவுக்கு சாதகம்:
அதனால் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக கேமரூன் க்ரீன் விலக உள்ளதாக ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மைக்கேல் நேசர் அல்லது ஸ்காட் போலண்ட் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் ரோஹித் விலக வாய்ப்பு? காரணம் என்ன? வெளியான தகவல்
இந்த தகவல் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் கேமரூன் கிரீன் விலகினால் அது இந்தியாவுக்கு அது மிகப்பெரிய சாதகமான விஷயமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் இதுவரை 1377 ரன்களையும் 35 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



