- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs AUS : மைக்கல் கிளார்க், மேக்ஸ்வெல் வரிசையில் இந்திய மண்ணில் வரலாறு படைத்த – கேமரூன் கிரீன்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதலாம் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கை தேர்வு செய்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்து இருந்தது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

அதனை தொடர்ந்து இன்று துவங்கி நடைபெற்று வரும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் 104 ரன்களுடன் இருந்த கவாஜா தற்போது 150 ரன்களை தாண்டியும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அதேபோன்று நேற்றைய தினம் 49 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் கிரீன் இன்று தனது முதல் டெஸ்ட் சதத்தினை அடித்து அதைத் தாண்டி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரரான கேமரூன் கிரீன் தற்போது இந்திய அணிக்கு எதிராக மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

அதன்படி ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2020-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான கேமரூன் கிரீன் இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 827 ரன்களை அடித்திருந்தாலும் சதம் அடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் சதம் அடித்த அவர் ஆஸ்திரேலியா வீரர் ஒருவர் இந்திய மண்ணில் தங்களது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி சார்பாக மைக்கேல் கிளார்க் 2004-2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். அதேபோன்று கடந்த 2016-17ஆம் ஆண்டு கிளன் மேக்ஸ்வெல் ராஞ்சி மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருந்தார். தற்போது அவர்களது வரிசையில் 23 வயதான கேமரூன் கிரீன் தனது முதல் டெஸ்ட் சதத்தை அகமதாபாத் மைதானத்தில் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : முதல் நாளே முடிச்சுருக்கணும் பவுலிங்ல இந்தியா அந்த தப்பு பண்ணிட்டீங்க, இனி வெற்றி கஷ்டம் தான் – இயன் சேப்பல்

ஆஸ்திரேலிய அணி 172 ரன்களுக்கு நான்காவது விக்கெட்டினை இழந்த வேளையில் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரது பார்ட்னர்ஷிப் 200 ரன்களை கடந்து சிறப்பாக சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -