வெறும் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 23 வயது இளம் வீரரை 17.50 கோடிக்கு வாங்கிய மும்பை – யார் அந்த சாதனை வீரர்?

MI Mumbai Indians
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் கோலாகலமாக நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 405 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற அந்த ஏலத்தில் 87 இடங்கள் மட்டுமே காலியாக இருந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது. அதில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை பைனலில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயக்கன் விருதை வென்று இங்கிலாந்து 2வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய சாம் கரண் 18.50 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற புதிய சாதனை படைத்த அவருக்கு அடுத்த படியாக மற்றொரு இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் பெரிய தொகைக்கு போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட அவரை ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் அசால்ட்டாக முந்தினார்.

- Advertisement -

ஒரு இன்னிங்ஸ்:
இத்தனைக்கும் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஏராளமான சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ள பென் ஸ்டோக்ஸை வெறும் 8 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள கேமரூன் கிரீன் 17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார் என்பது நிறைய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகும். மேற்கு ஆஸ்ரேலியாவில் பிறந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஆனால் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டு காயத்தால் வெளியேறிய அவர் மீண்டும் போராடி இந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் மண்ணில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போது முதல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2022 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கி சரவெடியாக 61 (30) ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

மேலும் 1 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டராக ஆட்டநாயகன் விருது வென்ற அந்த போட்டி தான் இந்தியாவில் இருந்த ஐபிஎல் அணிகளை திரும்பிப் பார்க்க வைத்தது என்று சொல்லலாம். ஏனெனில் அதன் பின் இதுவரை மொத்தம் 8 டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 131 ரன்களை 17.37 என்ற சுமாரான சராசரியில் தான் எடுத்துள்ளார். இருப்பினும் 173.75 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ள அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரும் பிக்பேஷ் டி20 தொடரில் ஆல் ரவுண்டராக அசத்துவதால் இன்று நடைபெற்ற ஏலத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் வாங்குவதற்கு கடும் போட்டியிட்டன.

அதில் கைரன் பொல்லார்ட் ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி 17.5 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனைக்கும் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற கேமரூன் கிரீன் அந்த முயற்சியிலேயே ஜேக்பாட் அடித்ததை போல் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போயுள்ளார். அதனால் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பங்கேற்ற ஏலத்திலேயே அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற வரலாற்று சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs BAN : டெஸ்டில் மாஸ் காட்டும் ரிஷப் பண்ட் – தோனியின் சாதனைகளை உடைத்து 2 புதிய வரலாற்று சாதனை

அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலைபோன ஆஸ்திரேலிய வீரர் என்ற பட் கமின்ஸ் சாதனையையும் முறியடித்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கேமரூன் கிரீன் : 17.5 கோடி, மும்பை, 2022
2. பட் கமின்ஸ் : 15.5 கோடி, கொல்கத்தா, 2020
3. கிளன் மேக்ஸ்வெல் : 14.25 கோடி, பெங்களூரு 2021

Advertisement