ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்தது. ஆனால் அடுத்த போட்டியில் பெங்களூருவிடம் 197 ரன்களை துரத்த முடியாமல் தோற்ற சென்னை நேற்று ராஜஸ்தானிடம் 183 இலக்கை சேசிங் செய்ய முடியாமல் தோற்றது. இந்தத் தோல்விக்கு பேட்டிங் துறையில் கேப்டன் ருதுராஜ் தவிர்த்து இதுவரை மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடாதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக ராகுல் திரிபாதி, சாம் கரண், விஜய் சங்கர், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் சுமாராக விளையாடி வருவது சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்து வருகிறது. இந்நிலையில் இப்போதெல்லாம் 19, 20வது ஓவர்களில் வெற்றிப் பறிபோகும் என்பது தெரிந்து பவுலர்கள் சாதுரியமாக மாறி விட்டதாக புஜாரா தெரிவித்துள்ளார். அது போன்ற சூழ்நிலையில் தோனி, ஜடேஜா ஆகியோர் 16, 17வது ஓவர்களில் தடவலான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அதிரடியை துவக்கினால் மட்டுமே வெற்றி காண முடியும் என்று புஜாரா கூறியுள்ளார்.
கான்வே வேண்டும்:
மேலும் பேட்டிங் துறையை சரி செய்ய 2023இல் 500+ ரன்கள் விளாசி கோப்பையை வெல்ல உதவிய டேவோன் கான்வே பிளேயிங் லெவனில் விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி புஜாரா பேசியது பின்வருமாறு. “கடந்தக் காலங்களில் குறைந்த அனுபவம் கொண்ட பவுலர்கள் மீது உங்களால் அதிக அழுத்தத்தைப் போட்டு வெற்றியைப் பறிக்க முடிந்தது”
“ஆனால் இப்போது நிலைமைகள் மாறி விட்டது. பவுலர்கள் சாதூரரியமாக மாறி விட்டனர். சந்திப் சர்மா போன்ற பவுலர்கள் கூட யார்க்களை நன்றாக வீசுகின்றனர். ஆனால் இதே பவுலர் 5 வருடத்திற்கு முன்பாக இருந்தால் கொஞ்சம் தவறு செய்திருப்பார்கள். இந்த விஷயத்தில் தான் சென்னை அழுத்தத்தைப் பெறுகிறது. எனவே ஜடேஜா மற்றும் தோனி ஜோடி சேர்ந்த ஆரம்பத்திலேயே வேகத்தை அதிகரித்திருக்க வேண்டும்”
புஜாரா அட்வைஸ்:
“இருப்பினும் அதிலும் 2 விஷயங்கள் இருக்கிறது. ஒருவேளை அவர்களில் ஒருவர் ஆரம்பத்திலேயே அவுட்டானால் தோல்வி முன்னதாகவே கிடைத்திருக்கும். இந்த சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை நன்றாக இல்லை. மிடில் ஆர்டரில் அசத்தும் அளவுக்கு அவர்களிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் இல்லை. எனவே இது சென்னை தங்களது பேட்டிங் வரிசையை மாற்றுவதற்கான நேரமாகும்”
இதையும் படிங்க: பெரிய ஃபினிஷர் தோனியால் 2010, 2016 மாதிரி முடியல.. 5 வருஷமா சிஎஸ்கே அதை தொட முடியல.. சேவாக் சாடல்
“ஜேமி ஓவர்டன் நன்றாக பௌலிங் செய்யவில்லை. ராகுல் திரிபாதி தொடர்ச்சியாக அசத்த தடுமாறுகிறார். அங்கே தான் டேவோன் கான்வே அணிக்குள் வரவேண்டும் என்று நான் கருதுகிறேன்” என கூறினார். மொத்தத்தில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் புள்ளிப்பட்டியலில் சென்னை 7வது இடத்திற்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



