ஐபிஎல் 2025 பிரீமியர் லீக் டி20 தொடரில் மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற 11வது போட்டியில் ராஜஸ்தான் கிரிக்கெட் அணியிடம் சென்னை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கௌகாத்தியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 183 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 63 (44) ரன்கள் விளாசி அசத்தினார்.
ஆனால் ரச்சின் ரவீந்திரா 0, ராகுல் திரிபாதி 23, சிவம் துபே 18, விஜய் சங்கர் 9 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். கடைசியில் தோனி 16, ஜடேஜா 32*, ஓவர்டன் 11* ரன்கள் எடுத்தும் சென்னை தங்களது இரண்டாவது தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
5 வருடமாக திணறல்:
இருப்பினும் சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் ஹெட்மேயர் அபார கேட்ச் பிடித்ததால் தோனி அவுட்டானார். அதோடு சென்னை அணியின் சென்னை அணியின் வெற்றியும் உடைந்தது. ஒரு காலத்தில் 200 ரன்களை சேசிங் செய்வதற்கு பெயர் போன சென்னை அணி தற்போது 180, 190 ரன்களை கூட துரத்த முடியாமல் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது.
சொல்லப்போனால் 2019க்குப்பின் 180+ இலக்கை துரத்திய 9 போட்டிகளிலும் சென்னை 9 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் 5 வருடங்களாக சென்னை அணியால் 180 ரன்களை ஒருமுறை கூட சேசிங் செய்ய முடியவில்லை என்று வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். மேலும் தோனி எவ்வளவு பெரிய ஃபினிஷராக இருந்தாலும் அனைத்து நேரங்களிலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
சேவாக் விமர்சனம்:
அதனாலேயே சமீப காலங்களில் தோனியால் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியவில்லை, சென்னை அணியாலும் 180+ இலக்கை துரத்த முடியவில்லை என்று சேவாக் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடைசி 2 ஓவரில் 40 ரன்கள் அடிப்பது கடினமான வேலை. நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அது போன்ற சூழ்நிலையில் ஓரிரு போட்டிகளை மட்டுமே வெல்ல முடியும்”
இதையும் படிங்க: என்னுடைய இந்த விக்கெட் செலிப்ரேஷன் ஸ்டைலுக்கு காரணம் இதுதான் – வனிந்து ஹசரங்கா பதில்
“ஒருமுறை (2016இல்) அக்சர் பட்டேலுக்கு எதிராக கடைசி ஓவரில் தோனி 24 – 25 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தது நினைவிருக்கிறது. மற்றொரு தருணத்தில் தரம்சாலாவில் (2010இல்) இர்ஃபான் பதானுக்கு எதிராக அவர் 19 – 20 ரன்கள் அடித்தார். அது போன்ற போட்டிகள் மட்டுமே உங்கள் மனதின் மேலே நினைவில் இருக்கும். இதைத் தவிர்த்து சமீபத்திய போட்டிகளில் தோனி வெற்றிப் பெற்று கொடுத்தது நினைவில்லை. 5 வருடங்களாக சிஎஸ்கே அணியால் 180+ ரன்களை சேசிங் செய்ய முடியவில்லை” என்று கூறினார்.



