
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் மூன்று போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த அவர் தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கி நடைபெற்று வரும் இந்த “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இரண்டாவது இன்னிங்சிலும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவின் 33 ஆண்டுகால சாதனை ஒன்றினையும் அவர் முறியடித்துள்ளார். அந்த சாதனை யாதெனில் : கடந்த 1991-1992 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிய கபில் தேவ் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதுவே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீழ்த்திய அதிக விக்கெட்டுகளாக இருந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியிலேயே பும்ரா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸை வீழ்த்திய அவர் இந்த தொடரில் 26-வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதையும் படிங்க : “மச்சக்காரன் யா நீ” உன்னை மாதிரி அதிர்ஷ்டசாலியை பாத்தது இல்ல.. லாபுஷேனை கலாய்த்த – ஜஸ்ப்ரீத் பும்ரா
அதேபோன்று தற்போது ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்ட் தொடரில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி எஞ்சியுள்ளதால் அதிலும் அவர் சில விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.