ஐபிஎல் தொடருக்கு குட் பை சொல்லும் பிரபல கோச் ! இங்கிலாந்தின் மாஸ்டர் பிளான் – ரசிகர்கள் வியப்பு

Mccullum
- Advertisement -

கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விகளால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்ச்சியை சந்தித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அதில் முன்னேற்றத்தை செய்வதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. அதில் முதல் கட்டமாக கேப்டனாக இருந்த ஜோ ரூட் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் பதவியை ராஜினாமா செய்த நிலையில்புதிய கேப்டனாக மற்றொரு நட்சத்திரம் மற்றும் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் 4 – 0 என்ற படு மோசமான தோல்வியை இங்கிலாந்து சந்தித்ததன் காரணமாக பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட்டை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. எனவே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக இருந்து வருகிறது.

- Advertisement -

புதிய கோச்:
தற்போது புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஏற்றவாறு ஒரு நல்ல பயிற்சியாளரை தேர்வு செய்ய அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அத்துடன் கேப்டன்களைப் போலவே டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு வெவ்வேறு பயிற்சியாளர்களை நியமிக்கவும் அந்நாட்டு வாரியம் விரும்புகிறது. அதற்காக உலக அளவில் நிறைய நட்சத்திர பயிற்சியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்களையும் அந்நாட்டு வாரியம் வரவேற்றது.

அதற்கு 2011இல் இந்தியா உலக கோப்பையை வென்ற போது பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் மற்றும் சைமன் கேட்டிச், ப்ரெண்டன் மெக்கல்லம், கிரகாம் போர்ட், பால் காலிங்கவுட் போன்றவர்கள் விண்ணப்பித்ததாக தெரிய வருகிறது. அதில் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பெரும்பாலும் டெஸ்ட் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களில் பிரண்டன் மெக்கலம் அடுத்த டெஸ்ட் பயிற்சியாளராக வரவேண்டுமென்று இங்கிலாந்தின் புதிய இயக்குனராகப் பொறுப்பேற்றுள்ள ராப் கீ விரும்புவதாக இங்கிலாந்தின் பிரபல பிபிசி, கார்டியன் போன்ற பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

Mccullum

மெக்கல்லம் – ஸ்டோக்ஸ்:
கடந்த 2012 – 2016 வரை பிரண்டன் மெக்கலம் தலைமையில் அதிரடியான கிரிக்கெட்டை விளையாடிய நியூசிலாந்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சங்களை எட்டியது. குறிப்பாக 2015 உலகக்கோப்பையில் முதல் முறையாக ஃபைனலுக்கு சென்ற அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பல தரமான வெற்றிகளைப் பெற்றது. அதன்பின் ஓய்வு பெற்று டி20 கிரிக்கெட்டில் விளையாடி வந்த பிரண்டன் மெக்கல்லம் கடந்த 2019இல் மொத்தமாக ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக 2020, 2021 போன்ற காலகட்டங்களில் இங்கிலாந்தின் கேப்டன் இயன் மோர்கனுடன் அவர் இணைந்து பணியாற்றி நிலையில் 2021இல் இறுதிப் போட்டி வரை கொல்கத்தா முன்னேறியது. அந்த வகையில் இயன் மோர்கனிடம் மெக்கல்லம் கோச்சிங் பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு மோர்கன் நல்ல வகையில் பரிந்துரை செய்ததால் அவரை கடந்த வாரம் இன்டர்வியூ எடுத்ததாகவும் அதில் இங்கிலாந்தின் அடுத்த டெஸ்ட் பயிற்சியாளராக செயல்பட முடிவு எட்டப்பட்டதாகவும் பிபிசி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக ப்ரெண்டன் மெக்கல்லம் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குட் பை:
பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட் என்றாலும் அதில் அதிரடியாக விளையாட விரும்பும் மெக்கலம் பயிற்சியிலும் அதிரடியான யுக்திகளை கையாளக்கூடியவராக தென்படுகிறார். அந்த வகையில் புதிய கேப்டன் பென் ஸ்டோக்சும் அதிரடியை நம்பக்கூடிய ஒருவராக இருப்பதால் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட்டை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று அந்நாட்டு வாரியம் உறுதியாக நம்புகிறது. தற்போது வீழ்ந்து கிடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் அது தான் தேவை என்று அந்நாட்டு வாரியம் கருதுகிறது.

- Advertisement -

இதை அடுத்து இந்த வருடம் ஐபிஎல் 2022 தொடருடன் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து பிரண்டன் மெக்கலம் விலக உள்ளார். இருப்பினும் இந்த செய்திகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொறுமையை கையாள வேண்டிய பயிற்சியாளர் தேவை என்ற போது அதிரடியை நம்பும் மெக்கல்லம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : கேப்டன் என்ற பொறுப்பு கொஞ்சம் கூட இல்ல, தோல்விக்கும் நீங்களே பொறுப்பு – நட்சத்திர வீரர் மீது கவாஸ்கர் காட்டம்

மேலும் இதுவரை ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டில் மட்டுமே பயிற்சியாளராக செயல்பட்டு உள்ள அவர் இதுவரை உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் கூட பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் இல்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியானலும் பயிற்சியாளராக மெக்கல்லம் தனது பயணத்தை அடுத்த மாதம் தனது சொந்த நாடான நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து துவங்குகிறார்.

Advertisement