இந்தியா – பாக் 2 பேரும் தோற்க போட்டி போட்டாங்க, பாபர் அசாம் தப்பு பண்ணிட்டாரு – தோல்விக்கான காரணத்தை விளக்கும் பாக் வீரர்

Rohit-Sharma
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை போட்டி கடைசி ஓவர் வரை அனல் பறந்து விருந்து படைத்தது. ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சில் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக முகமது ரிஸ்மான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஹர்டிக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதன்பின் 148 ரன்களை துரத்திய இந்தியாவிற்கு முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும் ரோகித் சர்மா 12 ரன்களும் விராட் கோலி 35 ரன்களும் எடுத்து 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்தனர்.

இருப்பினும் அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட்டானதால் தடுமாறிய இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (29) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். ஆனால் அவருடன் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா கடைசி வரை அவுட்டாகாமல் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 33* (17) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்கள் எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இதே துபாயில் கடைசியாக கடந்த வருடம் உலககோப்பையில் வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

சமமான தடுமாற்றம்:
அத்துடன் குரூப் ஏ பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நடப்புச் சாம்பியன் இந்தியா இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது. முன்னதாக இப்போட்டி கடைசி ஓவர் வரை சென்றாலும் இரு அணிகளுமே தடுமாற்றமாக விளையாடியது என்றே கூறலாம். அதில் பேட்டிங்கில் தடுமாறிய பாகிஸ்தான் கடைசி ஓவர் வரை எடுத்துச் செல்லும் அளவுக்கு பந்துவீச்சில் அசத்தியது. மறுபுறம் பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா பேட்டிங்கில் தடுமாறி கடைசி ஓவர் வரை சென்று போராடி வென்றது.

அந்த அவ்வகையில் தோல்வியடைவதற்கு இரு அணிகளும் போட்டி போட்டவதாக தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் ரிஷப் பண்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து இந்தியா தவறு செய்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் பாபர் அசாம் ஓபனிங் அல்லாமல் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்று பலமுறை சொல்லி விட்டதாக தெரிவிக்கும் அவர் அதுவே தோல்விக்கு முக்கிய பங்காற்றியதாக வேதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தோற்க போட்டி:
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் இருவருமே தோற்பதற்கு முயற்சித்தார்கள். அதில் இந்தியா சற்று வெற்றிகரமாக செயல்பட்டது. குறிப்பாக இந்தியா தோற்பதற்கு சிறந்தவற்றை முயற்சித்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா வெற்றியை கடந்து அவர்களை அழைத்துச் சென்றார். அதேபோல் ரிஸ்வான் 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தால் என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்கள்? பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யும்போது முதல் 6 ஓவர்களில் 19 பந்துகளில் ரன்கள் எடுக்கவில்லை”

“அப்படி நீங்கள் நிறைய டாட் பந்துகளை சந்தித்தால் உங்களுக்கு பிரச்சனை தாமாக வரும். அதேபோல் பாபர் அசாம் – ரோகித் சர்மா ஆகிய 2 கேப்டன்களுமே அணியை தேர்வு செய்வதில் தவறு செய்தனர். இந்தியா ரிசப் பண்ட்டை நீக்கியது, பாகிஸ்தான் இப்திகர் அஹமதை 4வது இடத்தில் விளையாட வைத்தது. இதற்காக அவரை நான் அவமரியாதை செய்யவில்லை. அத்துடன் பாபர் அசாம் தொடக்க வீரராக அல்லாமல் 3-வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக விளையாட வேண்டும் என்று பலமுறை நான் கூறிவிட்டேன். பகார் – ரிஸ்வான் ஆகியோர் தான் ஓப்பனிங் ஜோடியாக களமிறங்க வேண்டும்”

“இரு அணிகளுமே சுமாரான கிரிக்கெட்டை விளையாடின. பாகிஸ்தான் அவர்களது பேட்டிங்கில் சொதப்பினார்கள். அதேபோல் ஜடேஜா 4வது இடத்தில் அனுப்பப்பட்டார். இது போன்ற அம்சங்கள் இரு அணிகளிலும் தவறு நடந்துள்ளதை காட்டுகிறது. பாகிஸ்தானில் ஆசிப் அலிக்கு பதிலாக சடாப் கானை மேலே அனுப்பியதற்கு பாபர் அசாம் என்ன திட்டம் வைத்திருந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் கடைசி ஓவரை சமாளிக்க அவர்கள் கணக்குப் போடவில்லை. இது கிரிக்கெட்டில் ஒரு மோசமான நாள். ஏனெனில் இரு அணிகளுமே சுமாராக விளையாடின. ஆனால் நான் எந்த அணியையும் விரும்பவில்லை. இதற்காக மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றும் நான் கவலைப்படவில்லை” என்று கூறினார்.

Advertisement