நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது மார்ச் 28-ம் தேதியான இன்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
புவனேஷ்வர் குமார் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :
கடந்த ஆண்டு 2025 ஐ.பி.எல் தொடரை ஆர்.சி.பி அணி கைப்பற்றியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்திய வேளையில் இந்த ஆண்டும் ஆர்.சி.பி அணி தங்களது வெற்றி நடையை தொடரும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆர்சிபி அணி இம்முறையும் கோப்பையை வெல்வதை இலக்காக கொண்டு களமிறங்க காத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த முதல் போட்டியில் விளையாட இருக்கும் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் இன்றைய முதல் ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் முதல் வேகப்பந்து வீச்சாளராக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான புவனேஸ்வர் குமார் இதுவரை 190 போட்டியில் விளையாடி 198 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் இன்றைய முதல் போட்டியில் அவர் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : 3 ஆண்டுகளுக்கு முன்னர் சஞ்சு சாம்சன் தன்னிடம் சொன்ன தகவலை பகிர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் – விவரம் இதோ
ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் யுஸ்வேந்திர சாஹல் மட்டுமே 174 போட்டிகளில் விளையாடி 221 விக்கெட்டுகளை கைப்பற்றி 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக இருக்கிறார். அவருக்கு அடுத்து புவனேஸ்வர் குமார் தான் இந்த சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



