IND vs RSA : துல்லியம் தரத்திற்கு சான்றாக ஜொலிக்கும் புவி – டி20 கிரிக்கெட்டில் தெ.ஆ’வுக்கு எதிராக புதிய வரலாற்று சாதனை

Bhuvaneswar Kumar
Advertisement

இந்தியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவு பெற்றுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த ஜுன் 9இல் துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அசால்டாக சேஸிங் செய்து அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்த தென்னாப்பிரிக்கா 12 தொடர் வெற்றிகளுடன் உலக சாதனை படைத்து வந்த இந்தியாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவுக்கு உள்ளான இந்தியா அதற்காக பின் வாங்காமல் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த அடுத்த 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த பெரிய வெற்றிகளை பெற்றது.

IND vs RSA Pant Chahal

அதனால் சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் நாங்களும் தோற்க மாட்டோம் என்று காட்டிய இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அதனால் 2 – 2 என்ற கணக்கில் சமனடைந்த இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 5-வது போட்டி ஜூன் 19 இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

கெடுத்த மழை:
அதில் கடந்த போட்டியில் பவுமா காயமடைந்ததால் தென்னாப்பிரிக்கா கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேசவ் மஹாராஜ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஆனால் அப்போது வந்த மழை சிறிது நேரம் பெய்து சென்று விட்டதால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டி 7.50 மணிக்கு துவங்கியது. ஆனால் மீண்டும் ஜோராக வந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடித்து நொறுக்கி மைதானத்தை முழுவதும் தண்ணீரால் நிரப்பியது. இறுதியில் 10.10 மணிவரை தொடர்ந்து மழை பெய்ததால் வேறு வழியின்றி அடிப்படை விதிமுறைப்படி இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

IND vs RSA Rishabh Pant Keshav Maharaj

அதனால் இரு அணிகளும் இந்த தொடரின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொண்டன. இருப்பினும் இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்தாலும் அதன்பின் கொதித்தெழுந்த இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கடைசி போட்டியில் வென்றால் முதல் முறையாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து கோப்பையை வெல்லலாம் என்ற பொன்னான வாய்ப்பை மழை கெடுத்தது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது

- Advertisement -

தரமான புவி:
இருந்தாலும் 4 இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை 6.07 என்ற அற்புதமான எக்கனாமியில் 10.14 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் 14.16 சராசரியில் எடுத்து அசத்தலாக பந்துவீசிய இந்தியாவின் சீனியர் நட்சத்திர பவுலர் புவனேஸ்வர் குமார் இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். கடந்த 2012இல் அறிமுகமாகி படிப்படியாக 3 வகையான இந்திய அணியிலும் பந்து வீசத் தொடங்கிய இவர் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் ஐபிஎல் தொடரிலும் துல்லியமாக பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து வந்தார். அதனால் புவனேஸ்வர் குமார் என்றால் துல்லியம் மற்றும் தரத்திற்கு பெயர் போனவர் என்று ரசிகர்களிடைய புகழ் பெற்றார்.

Bhuvaneswara Kumar

இருப்பினும் 2018இல் காயமடைந்த இவர் அதிலிருந்து குணமடைந்த போதிலும் அந்த பழைய பன்னீர்செல்வத்தை போல் பந்து வீச முடியாமல் ரன்களை வாரி வழங்கி வந்து கொண்டிருந்தார். அதனால் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இடத்தை இழந்த அவர் கடந்த ஜனவரியில் இதே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

அதனால் ஒருநாள் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அவருக்கு கடைசி வாய்ப்பாக வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் கடைசியாக வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அவர் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரிலும் 14 போட்டிகளில் 12 விக்கெட்களை 7.34 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து இந்திய அணியில் வலுவான இடத்தை பிடித்துள்ளார்.

வரலாற்று சாதனை:
அந்த நிலைமையில் தென்னாப்ரிக்க தொடரின் நாயகன் விருதை வென்று தனது தரத்தையும் திறத்தையும் மீண்டும் நிரூபித்துள்ள புவனேஸ்வர் குமார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆம் இவர் ஏற்கனவே கடந்த 2018இல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2 – 1 என்ற கணக்கில் வெல்வதற்கு 7 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.

இத்துடன் 2013இல் இலங்கை டி20 தொடர் மற்றும் 2014இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என மொத்தமாக இதுவரை 4 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ள புவனேஸ்வர் குமார் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற ஜாஹீர் கான், இஷாந்த் சர்மா (தலா 3 விருதுகள்) ஆகியோரை முந்தி புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 2 முறை தொடர் நாயகன் விருதை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலிக்கு (இலங்கைக்கு எதிராக) பின் பெற்றுள்ளார். மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வெல்லும் 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்குப் பின் பெற்றுள்ளார்.

Advertisement