
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி நல்ல வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் நெருப்பாக பவுலிங் செய்த அவர் இந்தியாவை எளிதாக ஃபைனல் அழைத்துச் சென்றதை மறக்க முடியாது. காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
அப்படி கிரிக்கெட்டில் வெற்றிகரமான வீரராக ஜொலிக்கும் ஷமியின் திருமண வாழ்க்கையில் மனைவி ஹசிம் ஜஹானுடன் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார். அதன் உச்சமாக ஒரு கட்டத்தில் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக தன்னுடைய மனைவியுடன் முகமது ஷமி விவாகரத்து பெற்ற பின் மீண்டும் அசத்த துவங்கினார்.
இந்நிலையில் தம்முடைய மனைவியால் ஷமி மிகப்பெரிய தொல்லைகளை சந்தித்ததாக இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். அதனால் ஃபிட்னஸை இழந்த முகமது ஷமி 2018லயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் ஷமிக்கு போதுமான உத்வேகத்தை கொடுத்து கம்பேக் கொடுத்து வைத்ததாக அருண் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அருண் பேசியது பின்வருமாறு. “ஷமி தன்னுடைய சொந்த வாழ்வில் பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்த போது ரவி சாஸ்திரி அவரிடம் “ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சுதந்திரமாக கேளுங்கள்” என்று சொன்னார். 2018 இங்கிலாந்து தொடருக்கு முன்பாக பெங்களூருவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற்றது”
“அப்போது ஃபிட்னெஸ் சோதனையில் ஷமி தேர்ச்சி பெறாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதனால் மிகப்பெரிய மனச்சோர்வை சந்தித்த அவர் தன்னுடைய சொந்த வாழ்வில் பிரச்சனைகளின் உச்சத்தில் இருந்தார். அதனால் என்னுடைய அறைக்கு வந்த அவர் பாஜி நான் கிரிக்கெட்டை விட விரும்புகிறேன் என்று சொன்னார்”
“அப்போது கிரிக்கெட்டை விட்டுவிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இன்று நீங்கள் சாதித்துள்ள அனைத்தும் கிரிக்கெட்டால் வந்தது என்று அவரிடம் சொன்னேன். அதற்கு கோபமாக இருப்பதாக சொன்ன அவரை சாஸ்திரியிடம் அழைத்துச் சென்றேன். அங்கே உங்களுடைய கோபத்தை பந்தில் காட்டுங்கள், ஃபிட்டாக இல்லை என்பதற்காக மட்டும் கிரிக்கெட்டை விடலாமா? என்று அவரிடம் சாஸ்திரி சொன்னார்”
இதையும் படிங்க: வேணாம் விட்ருங்க.. இந்திய அணிக்கு பிசிசிஐ கொண்டு வரும் ஃபிட்னெஸ் டெஸ்ட் மோசமானது.. ஏபிடி எச்சரிக்கை
“பின்னர் என்சிஏ’வுக்கு ஷமியை அனுப்பிய நாங்கள் 3 வாரம் பவுலிங் செய்யாமல் உடல்பயிற்சிகளை செய்யுமாறு சொன்னோம். அதனுடைய இறுதியில் இப்போது குதிரை போல் ஓடுகிறேன் என்று ஷமி சொன்னார். அந்த வகையில் தன்னுடைய நம்பிக்கையை மீட்டெடுத்த அவர் இங்கிலாந்தில் 5 போட்டிகளில் விளையாடினார். கடைசி போட்டியின் கடைசி நாளில் கூட 140 கி.மீ வேகத்தில் பவுலிங் செய்த அவருடைய ஃபிட்னஸ் லெவல் அற்புதமாக மாறியது” என்று கூறினார்.