250 வருட முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு வினோதம் ! உலகசாதனை படைத்த ரஞ்சி டீம் – முழுவிவரம்

ranji trophy
- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் இந்த வருடம் மீண்டும் 2 பாகங்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழகம் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் ஏற்கனவே வெளியேறியது. இருப்பினும் பெங்கால், ஜார்கண்ட், மும்பை, உத்தரகாண்ட், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன.

அதை தொடர்ந்து இந்த ரஞ்சி கோப்பையின் முக்கியமான நாக்-அவுட் சுற்று போட்டிகள் கடந்த ஜூன் 6-ஆம் தேதியன்று பெங்களூருவில் துவங்கியது. அதில் பெங்களூருவில் உள்ள அகடமி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய முதல் காலிறுதிப் போட்டியில் பெங்கால் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஜார்கண்ட் தெரியாத தனமாய் பந்து வீசுவதாக அறிவித்தது என்றுதான் கூறவேண்டும்.

- Advertisement -

மாஸ் காட்டிய பெங்கால்:
ஏனெனில் அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் ராமன் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் ஆரம்பம் முதலே நிதானமாகவும் பொறுமையாகவும் பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில் 67 ரன்கள் எடுத்திருந்தபோது அபிமன்யு ஈஸ்வரன் அவுட்டாக அடுத்து களமிறங்கிய அனுஸ்டப் மஜும்தார் அவரை விட மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அபிஷேக் ராமனுடன் 2-வது விக்கெட்டுக்கு 243 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 15 பவுண்டரிகளுடன் சதம் அடித்து 117 ரன்களில் அவுட்டானார்.

கொஞ்ச நேரத்திற்கு பின் 67 ரன்கள் எடுத்திருந்த தொடக்க வீரர் அபிஷேக் ராமன் ஒரு வழியாக ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து களமிறங்கிய சுதீப் கராமி களத்தில் நங்கூரமாக பாய் போட்டு படுத்து தூங்கும் வகையில் அட்டகாசமாக பேட்டிங் செய்து ஜார்கண்ட் பவுலர்களை வெளுத்து வாங்கி 21 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதமடித்து 286 ரன்கள் விளாசி அவுட்டானார். சரி இத்தோடு பெங்கால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதை நிறுத்தி விடுவார்கள் என்று நினைத்த ஜார்கண்ட் பவுலர்களுக்கு கதற கதற அடி கிடைத்தது என்று தான் மீண்டும் கூற வேண்டும்.

- Advertisement -

கதறகதற அடி:
ஏனெனில் அடுத்ததாக களமிறங்கிய மற்றொரு நட்சத்திர பெங்கால் வீரர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி தனது பங்கிற்கு 5 பவுண்டரி 2 சிக்சருடன் 73 ரன்களும் அவருடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்த அபிஷேக் போரல் தனது பங்கிற்கு 14 பவுண்டரியுடன் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 500 ரன்களை கடந்த பெங்கால் டிக்ளேர் செய்யுமா என்று ஏங்கிய ஜார்க்கண்ட் பவுலர்களுக்கு கொஞ்சம் கூட கருணை கிடைக்கவில்லை. காரணம் அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய சயன் மொண்டல் 5 பவுண்டரியுடன் 53* ரன்கள் குவித்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் வெந்துபோன ஜார்கண்ட் பவுவலர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல் டி20 இன்னிங்ஸ் ஆடிய இளம் வீரர் ஆகாஷ் தீப் அதிரடி சரவெடியாக வெறும் 18 பந்துகளில் 8 மெகா சிக்ஸர்களை தெறிக்கவிட்டு அரைசதம் அடித்து 53* ரன்களை விளாசினார். அதனால் 773/7 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு வழியாக திருப்தி அடைந்த பெங்கால் தங்களது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அந்த அளவுக்கு மோசமாக பந்துவீசிய ஜார்கண்ட் தனது முதல் இன்னிங்சில் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 139/5 ரன்களுடன் இன்னும் 634 ரன்கள் பின்தங்கி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

- Advertisement -

உலகசாதனை:
முன்னதாக இப்போட்டியில் பெங்கால் அணி சார்பில் களமிறங்கிய 9 பேட்ஸ்மேன்களும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி தங்களது பேட்டிங் பசியை ஆற்றிக் கொண்டனர். அதன் வாயிலாக கடந்த 250 வருடங்களாக நடைபெற்று வரும் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் முதல் 9 பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ரன்களை பதிவு செய்த முதல் அணி என்ற உலக சாதனையை பெங்கால் படைத்தது.

இதையும் படிங்க : தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்க போகும் உத்தேச 11 பேர் இந்திய அணி இதோ

இதற்கு முன் கடந்த 1893-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த 8 பேட்ஸ்மேன்கள் போர்ட்ஸ்மவுத் நகரில் நடைபெற்ற ஒரு முதல் தர கிரிக்கெட் போட்டியில் 50க்கும் ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அதேபோல் ஒரு இன்னிங்சில் 7 பேட்ஸ்மென்கள் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தது இதற்கு முன் 27 தருணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 போட்டிகள் ரஞ்சி கோப்பையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement