ஐபிஎல் துவங்குதற்கு முன்பே அதிரடியான அறிவிப்பை ஓப்பனாக வெளியிட்ட பென் ஸ்டோக்ஸ் – சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம்

Ben-Stokes
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. அகமதாபாத் நகரில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை எதிர்கொள்கிறது. 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை கடந்த வருடம் கேப்டன்ஷிப் குளறுபடி மற்றும் ருதுராஜ் கைக்வாட் போன்ற முக்கிய வீரர்களின் சுமாரான செயல்பாடுகளால் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

இருப்பினும் அந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள சென்னை 2021இல் கோப்பையை வென்றது போல் இம்முறையும் சிறப்பாக செயல்பட்டு 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதை விட நவீன கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ரசிகர்களால் கொண்டாடப்படும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதல் முறையாக இந்த சீசனில் சென்னைக்காக விளையாடுவது மற்றுமொரு பலமாக கருதப்படுகிறது.

- Advertisement -

வேலையை ஆரம்பித்த ஸ்டோக்ஸ்:
சொல்லப்போனால் இங்கிலாந்தின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் ஓய்வு பெற்ற ட்வயன் ப்ராவோ இடத்தை ஆல்ரவுண்டராகவும் ஓய்வு பெற போகிறார் என்று எதிர்பார்க்கப்படும் தோனியின் இடத்தை கேப்டனாகவும் நிரப்புவார் என்று சென்னை ரசிகர்கள் உறுதியான நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரின் கடைசி பகுதியில் விளையாடப் போவதில்லை என்று பென் ஸ்டோக்ஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதாவது வரும் ஜூன் 1ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து களமிறங்கும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அட்டவணையின் படி ஐபிஎல் தொடர் மே 28ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அந்த 2 போட்டிகளுக்கும் இடையே வெறும் 4 நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கும் நிலையில் கேப்டனாக இங்கிலாந்து அணியை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்பதற்காக 2023 ஐபிஎல் தொடரின் கடைசி பகுதியிலிருந்து வெளியேறி அயர்லாந்து தொடருக்காக தயாராக உள்ளதாக பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் நிச்சயமாக நான் எனக்கு நானே தேவையான முழு நேரத்தை கொடுத்துக் கொண்டு அயர்லாந்துக்கு எதிரான அந்த போட்டியில் விளையாட தயாராக உள்ளேன். அத்துடன் இதர இங்கிலாந்து வீரர்களிடம் நானே சென்று ஆஷஸ் தொடருக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ள உள்ளேன். ஏனெனில் அந்த 5 போட்டிகள் மிகவும் முக்கியமானதாகும். எனவே அதைப் பற்றி நமது வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது முக்கியமாகும்”

“அது அந்த வாரத்தில் (ஐபிஎல்) ஒவ்வொரு வீரர்களும் என்ன செய்ய விரும்புகிறார்கள் மற்றும் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை பொறுத்து அமையும். ஏனெனில் அயர்லாந்து தொடரை விட ஆஷஸ் தொடர் மிகவும் முக்கியமானதாகும்” என்று கூறினார். இதிலிருந்து சென்னை மொத்தமாக விளையாட இருக்கும் 14 லீக் போட்டிகளில் குறைந்தது கடைசி 2 – 4 போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வருகிறது. ஆனால் பொதுவாகவே கடைசி 3 – 4 போட்டிகள் தான் பிளே சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தீர்மானிக்கக் கூடிய போட்டிகளாக அமையும் என்பதை அனைவரும் அறிவோம்.

இதையும் படிங்க:இந்திய மண்ணில் பாகிஸ்தான் வெற்றிக்கொடியை பறக்க விடுவதே லட்சியம் – பாபர் அசாம் அதிரடி பேட்டி, விவரம் இதோ

அப்படிப்பட்ட நிலையில் 16.25 கோடி என்ற பெரிய தொகையை செலவழித்து நம்பி வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் அதிலிருந்து விலக உள்ளார் என்பது சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களாகவே ஜேசன் ராய் போன்ற இங்கிலாந்து வீரர்கள் இது போல முக்கிய நேரத்தில் ஐபிஎல் அணிகளை காலை வாருவது சாதாரணமாகி வருகிறது. அந்த நிலையில் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே பென் ஸ்டோக்ஸ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு “சீசன் ஆரம்பிக்கவே இல்ல அதற்குள் நீங்கள் ஆரம்பித்து விட்டீர்களா” என்ற வகையில் சென்னை ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement