விலகிய ஸ்டோக்ஸ் – பணத்துக்காக வீரர்களை மெஷின்களாக பார்க்கும் வாரியங்கள், நவீன கிரிக்கெட்டின் அவலம்

Stokes
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து போராடி தோல்வியடைந்தது. அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு அந்நாட்டைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அடுத்த நாள் காலையில் அறிவித்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த 2011இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2013 முதல் 3 வகையான போட்டிகளிலும் தனது சிறந்த பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையால் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக உருவெடுத்து நிறைய வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக 2019இல் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட அவர் நியூசிலாந்துக்கு எதிரான மாபெரும் இறுதிப்போட்டியில் 84 ரன்கள் குவித்து முதல் முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பையை முத்தமிட துருப்புச் சீட்டாக செயல்பட்டார். அதனால் உலக அளவில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் என்ற பெயரைப் பெற்ற அவர் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக பொறுப்பேற்ற நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0, 21, 27 என சுமாராக செயல்பட்டார். அதனால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

- Advertisement -

பணிச்சுமை:
சமீப காலங்களில் பணிச்சுமை என்பது கிரிக்கெட் வீரர்களின் உடலிலும் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டு வந்த நிலையில் 70களில் அறிமுகமான ஒருநாள் போட்டிகளுக்கு பின் 2005இல் டி20 போட்டிகள் உருவாக்கப்பட்டதால் 21-ஆம் நூற்றாண்டில் 3 வெவ்வேறு வகையான போட்டிகள் விளையாடப்பட்டு வருகின்றன. போதாகுறைக்கு கடந்த 2007 டி20 உலகக் கோப்பையின் வெற்றியால் இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடர்கள் அனைத்து நாடுகளிலும் உருவாக்கப்பட்டன.

அதனால் பென் ஸ்டோக்ஸ், விராட் கோலி போன்ற தரமான வீரர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் பிரீமியர் லீக் தொடர் என வருடம் முழுவதும் ஓய்வின்றி விளையாடும் நிலைமை ஏற்பட்டது. நாளடைவில் அந்த டி20 தொடர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக பணத்தை கொட்டிக் கொடுக்க துவங்கியதால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான முக்கியத்துவத்தை அனைத்து வாரியங்களும் கொடுக்கத் துவங்கின.

- Advertisement -

என்னால முடியலைங்க:
இதனால் ஒரு காலத்தில் ஒரு வருடத்தில் மொத்தமாக 4 – 5 தொடர்களில் பங்கேற்று 4 வருடங்களுக்கு ஒரு முறை உலகக் கோப்பையில் பங்கேற்ற வீரர்கள் நவீன கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் ஒரு உலக கோப்பையில் பங்கேற்பதுடன் மாதத்திற்கு குறைந்தது 2 தொடர்களில் நாட்டுக்காக விளையாடி வேண்டியுள்ளது. அதுபோக பிரீமியர் லீக் டி20 தொடர்களிலும் பங்கேற்க வேண்டியுள்ளது. இந்த வளர்ச்சி நிறைய போட்டிகளை பரிசாக அளித்தாலும் அதை நடத்தும் வாரியங்கள் வீரர்களை மனிதர்களாக பார்க்காமல் மெஷின்களாக பார்க்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.

சமீப காலங்களில் விராட் கோலி போன்றவர்களின் ஆட்டம் பாதிக்கப்படுவதற்கு இதுவும் காரணமாகவும் அமைகிறது. மேலும் இதிலிருந்து விடுபட இதே பென் ஸ்டோக்ஸ், கிளன் மேக்ஸ்வெல் போன்ற தற்காலிக பிரேக் எடுத்துக்கொண்டு திரும்பினாலும் மீண்டும் அனைத்து வகையான போட்டிகளில் விளையாடுவதால் மீண்டும் அவர்களது உடலில் களைப்பு ஏற்படுகிறது. அதனால் மீண்டும் பிரேக் எடுக்க விரும்பாத பென் ஸ்டோக்ஸ் நிரந்தர தீர்வுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

- Advertisement -

அவர் தனது அறிவிப்பில் நிறைய கூறியிருந்தாலும் பணிச்சுமை பற்றி குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “தற்போது 3 வகையான கிரிக்கெட்டிலும் என்னால் நீடிக்க முடியவில்லை. நெருக்கமான அட்டவணைகளுக்கு மத்தியில் என்னிடம் அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு என்னால் செயல்பட எனது உடல் ஒத்துழைப்பு தர மறுப்பதாக உணருகிறேன்” என்று கூறியுள்ளார். அதாவது அனைத்துப் போட்டிகளிலும் தம்மால் முடியவில்லை என்பதால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக 31 வயதிலேயே அறிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ் நவீன கிரிக்கெட்டில் வீரர்களின் பணிச்சுமை அவலத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளார்.

பணமான கிரிக்கெட்:
இப்போது கூட பாருங்கள் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 17-ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில் ஜூலை 19-ஆம் தேதி வெறும் ஒருநாள் இடைவெளியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து களமிறங்குகிறது. அதில் தனது சொந்த ஊரான துர்ஹாம் நகரில் நடைபெறும் முதல் போட்டியுடன் பென் ஸ்டோக்ஸ் விடை பெற உள்ளார்.

- Advertisement -

மேலும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களையும் சேர்த்து தற்போது ஐசிசியும் பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில் நிறைய உலக கோப்பைகளை அடுத்த கால அட்டவணையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் 2023 – 2027 கால அட்டவணையில் 42 டெஸ்ட் போட்டிகள் 44 ஒருநாள் போட்டிகள் 52 டி20 போட்டிகள் என மொத்தம் 138 போட்டிகளில் இங்கிலாந்து விளையாட உள்ளது. இதுபோக 2 50 ஓவர், 2 டி20, 2 சாம்பியன்ஸ் ட்ராபியிலும் அந்த அணி பங்கேற்க வேண்டியுள்ளது. இந்தியா போன்ற அணிகளுக்கும் கிட்டத்தட்ட இதுதான் அட்டவணையாகும்.

இந்த நிலைமை இப்படியே நீடிப்பது நல்லதல்ல என்று எச்சரித்துள்ள முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் பேசியது பின்வருமாறு. “ஐசிசி உலகக்கோப்பை தொடர்களையும் அதற்கிடையே அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்களது தொடர்களையும் இடைவிடாமல் நிரப்பும் வகையில் நடத்தினால் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் 31 வயதிலேயே ஒரு வகையான கிரிக்கெட்டில் என்னால் விளையாட முடியாது என்று வெளியேறுவார்கள்.

இதையும் படிங்க : இதே மாதிரி செயல்பட்டால் கபில் தேவை முந்த வாய்ப்பிருக்கு – பாண்டியாவை பாராட்டும் முன்னாள் வீரர்

இது சரியான அம்சமல்ல. எனவே தற்போது நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கால அட்டவணைகளை அனைத்து வாரியங்களும் சரியான வகையில் நிர்மாணிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement