நாட்டுக்காக மாட்டேன்னு சொல்வேனா? சிஎஸ்கே’வுக்கு டாட்டா காட்டி – 2023 உ.கோ வெல்ல ஓய்வை வாபஸ் பெறும் இங்கிலாந்து வீரர்

Ben Stokes Moeen Ali
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதற்கு சவாலாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா, தரமான நியூசிலாந்து போன்ற அணிகள் பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு சாம்பியனாக திகழும் இங்கிலாந்து சவாலான சூழ்நிலைகளை கொண்ட இந்திய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தக்க வைத்து சரித்திரம் படைக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

முன்னதாக 2017 வரை தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்தை இயன் மோர்கன் அடித்து நொறுக்கும் வீரர்களை கண்டறிந்து அதிரடி படையாக மாற்றி சொந்த மண்ணில் நடைபெற்ற 2019 உலகக் கோப்பையை ஐசிசி முட்டாள் தனமான விதிமுறையின் உதவியுடன் வென்று கொடுத்தார். அப்போதிலிருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்படும் இங்கிலாந்து கடந்த 2022 டி20 உலக கோப்பையை ஜோஸ் பட்லர் தலைமையில் வென்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

ஓய்வு வாபஸ்:
அந்த வரிசையில் 2023 உலகக் கோப்பையையும் தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்கும் அந்த அணியில் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2016 டி20 உலக கோப்பை ஃபைனலில் 4 சிக்சர்கள் கொடுத்து கோப்பையை கோட்டை விட்டு விமர்சனத்திற்குள்ளானாலும் நாளடைவில் தன்னுடைய உழைப்பால் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக முன்னேறிய அவர் 2019 உலகக்கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அதே போல 2019 ஆஷஸ் ஹெண்டிங்லே டெஸ்டில் தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் 2022 டி20 உலக கோப்பை ஃபைனலிலும் அரை சதமடித்து கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். இருப்பினும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கடந்த வருடம் 31 வயதிலேயே ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் தற்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கேப்டன் ஜோஸ் பட்லர் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்துள்ள ஓய்வு முடிவை வாபஸ் பெற்று 2023 உலகம் கோப்பையில் விளையாட பென் ஸ்டோக்ஸ் முடிவெடுத்துள்ளதாக பிரபல டெலிகிராப் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக தற்போது முழங்கால் பிரச்சினையை கொண்டுள்ள அவர் 2023 உலக கோப்பையில் விளையாடும் பட்சத்தில் 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதை தவிர்க்க முடிவெடுத்துள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இது பற்றி லண்டனின் டெலிகிராம் நாளிதழ் தெரிவித்துள்ளது பின்வருமாறு. “இந்தியாவில் இந்த வருடம் நடைபெறும் உலக கோப்பையை தக்க வைக்க இங்கிலாந்துக்கு உதவி செய்வதற்காக பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்துள்ள ஓய்வு முடிவிலிருந்து யூ-டர்ன் போடுவதற்கு தயாராகியுள்ளார்”

“இதற்காக அவர் அடுத்த வருட ஐபிஎல் தொடரையும் தவற விட உள்ளார். இங்கிலாந்தின் தற்போதைய டெஸ்ட் கேப்டனான அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் கேப்டனாக இருக்கும் ஜோஸ் பட்லர் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் உலகக்கோப்பையில் விளையாடுவார்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி இங்கிலாந்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மறுபுறம் இதற்கும் ஐபிஎல் 2024 தொடருக்கும் என்ன சம்பந்தம் என்று சென்னை ரசிகர்களுக்கு தோன்றலாம். அதற்கான காரணம் என்னவெனில் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டிகளின் கில்லியாக செயல்படும் சூரியகுமார் – விராட் கோலி, பாபர் அசாம் உலக சாதனை சமன்

எனவே உலகக்கோப்பையிலும் அந்த டெஸ்ட் தொடரிலும் விளையாடுவதால் ஏற்படும் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே ஐபிஎல் தொடரை அவர் புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. சொல்லப்போனால் ஏற்கனவே இந்த வருடம் வரலாற்றிலேயே உச்சகட்டமாக 16.25 கோடிக்கு சென்னைக்காக வாங்கப்பட்டு 2 போட்டியில் மட்டும் விளையாடிய அவர் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் ஓய்வெடுத்தார். அதே போல இம்முறை நாட்டுக்காக விளையாட சென்னை அணிக்கு அவர் டாட்டா காட்ட தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement