Ashes 2023 : பரபரக்கும் 3வது டெஸ்ட் – ஜாம்பவான்கள் கேரி சோபர்ஸ், ஜேக் காலிஸ் ஆல் டைம் உலக சாதனையை சமன் செய்த பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes 80
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்ட இங்கிலாந்து சொந்த மண்ணில் அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்து அவமானத்திற்கு விமர்சனத்திற்கும் உள்ளானது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி ஜூலை 6ஆம் தேதி ஹெண்டிங்க்லே மைதானத்தில் துவங்கியது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் முறையாக இத்தொடரில் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஒருநாள் கிரிக்கெட்டைப் போல அதிரடியாக விளையாடிய மிட்சேல் மார்ஷ் சதமடித்து 118 (118) ரன்களை விளாசிய நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக 150க்கும் மேற்பட்ட வேகத்தில் பந்து வீசி மிரட்டிய மார்க் வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதை விட தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 237 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் சாதனை:
சொல்லப்போனால் ஜாக் கிராவ்லி 33, பென் டூக்கெட் 2, ஹரி ப்ரூக் 3, ஜோ ரூட் 19, ஜானி பேரஸ்டோ 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 87/5 என சரிந்த இங்கிலாந்து 200 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்ற கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சிக்ஸருடன் அரை சதமடித்து இங்கிலாந்தை காப்பாற்ற போராடினார்.

குறிப்பாக கடந்த போட்டியில் சதமடித்து 155 ரன்கள் குவித்து போராடியதைப் போலவே இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்த அவர் 3 ரன்களை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்களை சாய்த்து அசத்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது நாள் முடிவில் 116/4 ரன்களுடன் தடுமாறினாலும் 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

டேவிட் வார்னர் 1, ஸ்டீவ் ஸ்மித் 2, கவாஜா 43, மார்னஸ் லபுஸ்ஷேன் 33 என அந்த டாப் 4 பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்த நிலையில் களத்தில் டிராவிஸ் ஹெட் 18*, மிட்சேல் மரஹ் 17* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் போட்டி நடைபெறும் ஹெண்டிங்க்லே மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் 142 ரன்களை முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா வெல்வதற்கே அதிக வாய்ப்பு காணப்படுகிறது. அதன் காரணமாக சொந்த மண்ணில் 20 வருடங்களுக்குப் பின் ஆஷஸ் தொடரில் தோற்கும் மெகா அவமானத்தை தவிர்ப்பதற்காக இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் முழுமூச்சை கொடுத்துப் போராட உள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் 80 (108) ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களை கடந்தார். மேலும் பந்து வீச்சில் ஏற்கனவே 197 விக்கெட்களை எடுத்துள்ள அவர் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்த வீரர் என்ற மகத்தான வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் கேலிஸ் ஆகியோரது உலக சாதனைகளை சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. சர் கேர்பீல்ட் சோபர்ஸ் : 8032 ரன்கள் 235 விக்கெட்கள்
2. ஜாக் கேலிஸ் : 13289 ரன்கள் 292 விக்கெட்கள்
3. பென் ஸ்டோக்ஸ் : 6008 ரன்கள் 197 விக்கெட்கள்*

இதையும் படிங்க:ஹேப்பி பர்த்டே தாதா : இந்திய கிரிக்கெட்டை வளமாக்கிய கங்குலி – இன்றும் படைத்துள்ள மகத்தான சாதனைகளின் பட்டியல்

அந்த வகையில் இயன் போத்தம், ஆண்ட்ரூ ஃபிளின்டாப் ஆகிய மகத்தான இங்கிலாந்து ஆல் ரவுண்டர்களை மிஞ்சியுள்ள பென் ஸ்டோக்ஸ் 2019 ஆஷஸ் தொடரில் இதே ஹெண்டிங்க்லே மைதானத்தில் தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது போன்ற வெற்றியை இம்முறையும் பெற்றுக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement