இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. இருப்பினும் 3வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்த இங்கிலாந்து 4வது போட்டியிலும் போராடிக் கொண்டு வந்த வெற்றியை மழை வந்து தடுத்தது. அதனால் அப்போட்டி ட்ராவில் முடிந்த காரணத்தால் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.
அதனால் தோல்வியை தவிர்க்க ஜூலை 27ஆம் தேதி லண்டன் ஓவலில் துவங்கிய கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சுமாராக செயல்பட்டு 283 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 85 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 295 ரன்கள் 12 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஸ்டோக்ஸ் சாதனை:
அதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து பொறுப்புடன் செயல்பட்டு 3வது நாள் முடிவில் 389/9 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் 91, ஜானி பேர்ஸ்டோ 78, பென் ஸ்டோக்ஸ் 42, பென் டூக்கெட் 42 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுத்தனர். அத்துடன் களத்தில் ஆண்டரசன் 8* ப்ராட் 2* ரன்களுடன் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மீண்டும் மிட்சேல் ஸ்டார்க் 4* விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலை பெற்று இருப்பதால் இந்த போட்டியில் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் 22 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் இங்கிலாந்து ஆஷஸ் கௌரவத்தை காப்பாற்ற இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் 3 பவுண்டரியுடன் 1 சிக்ஸரையும் பறக்க விட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2023 ஆஷஸ் தொடரில் மொத்தமாக 15 சிக்சர்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக 143 வருட வரலாறு கொண்ட ஆஷஸ் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற முன்னாள் நட்சத்திரம் கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்த பென் ஸ்டோக்ஸ் புதிய சரித்திர சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) : 15* (2023)
2. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) : 14 (2005)
3. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) : 13 (2019)
4. ஆண்ட்ரூ ஃபிளின்டாப் (இங்கிலாந்து) : 11 (2005)
5. ப்ராட் ஹாடின் (ஆஸ்திரேலியா) : 9 (2013/14)
அது போக இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 கேட்ச்களை பிடித்த அவர் தன்னுடைய கேரியரில் மொத்தமாக 100 கேட்ச்களை பிடித்துள்ளார். இதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000க்கும் மேற்பட்ட ரன்கள் 100க்கும் மேற்பட்ட விக்கெட்கள் எடுத்து 100க்கும் மேற்பட்ட கேட்ச்களை பிடித்த 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்ற பென் ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் ஆகியோருடைய தனித்துவமான உலக சாதனையும் சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க:Ashes 2023 : சச்சின் டெண்டுல்கரின் சரித்திர உலக சாதனையை சமன் செய்த ஜோ ரூட் – 2 ஆல் டைம் சாதனைக்கும் குறி
பொதுவாக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்துபவர்களையே ஆல் ரவுண்டர் என்றழைப்பது வழக்கமாகும். அதற்கு நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக செயல்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் 3வது வீரராக படைத்த அந்த உலக சாதனையின் விவரம் பின்வருமாறு:
1. கேரி சோபர்ஸ் : 8032 ரன்கள், 235 விக்கெட்கள், 109 கேட்ச்கள்
2. ஜேக் காலிஸ் : 13289 ரன்கள், 292 விக்கெட்கள், 200 கேட்ச்கள்
3. பென் ஸ்டோக்ஸ் : 6075 ரன்கள் 197 விக்கெட்கள் 100 கேட்ச்கள்*