இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மேலும் 3வது போட்டியில் இங்கிலாந்து வென்று பதிலடி கொடுத்த போதிலும் மழையால் 4வது போட்டி டிராவில் முடிந்த காரணத்தால் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா ஆஷஸ் கௌரவத்தை தக்க வைத்து அசத்தியது.
அந்த நிலையில் சொந்த மண்ணில் 22 வருடங்களாக ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் மானத்தை காப்பாற்ற ஜூலை 27ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து போராடி 283 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 85 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்க ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 295 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் முன்னிலை பெற்றது.
உலக சாதனையும் மழையும்:
அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 395 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 73, பென் டூக்கெட் 42, பென் ஸ்டோக்ஸ் 42, ஜோ ரூட் 91, ஜானி பேர்ஸ்டோ 78 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இறுதியில் 384 என்ற கடினமான இலக்கை துரத்தி வரும் ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே டேவிட் வார்னர் – உஸ்மான் கவாஜா ஆகியோர் நங்கூரமாக நின்று இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 135/0 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது மழை வந்ததால் 4வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. தற்போதைய நிலையில் கைவசம் 10 விக்கெட்டுகளை வைத்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு கடைசி நாளில் 249 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் வெற்றி பெற்று 22 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
குறிப்பாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஸ்டுவர்ட் ப்ராட்க்கு எதிராக எப்போதுமே தடுமாறக்கூடிய வார்னர் நங்கூரமாக 58* ரன்களும் கவாஜா 69* ரன்களும் எடுத்து களத்தில் இருக்கும் நிலையில் ஸ்மித், லபுஸ்ஷேன், மார்ஷ், ஹெட் என முக்கிய வீரர்கள் அனைவரும் எஞ்சிய 249 ரன்களை எளிதாக எடுத்து விடுவார்கள் என்றே சொல்லலாம். ஆனால் கடந்த போட்டியில் இங்கிலாந்தின் வெற்றியை தடுத்த மழை இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் சரித்திர வெற்றிக்கு குறுக்கே நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஜூலை 31ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தை சுற்றிய பகுதிகளில் சராசரியாக 50 – 70% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிப்பதால் ஆஸ்திரேலியாவின் கைக்கு கிடைத்த வெற்றி கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஒருவேளை மழையே வழிவிட்டாலும் கடைசி நாளில் ஆண்டர்சன், வுட், ஓக்ஸ் போன்ற தரமான பவுலர்களுடன் இணைந்து தீயாக செயல்பட்டு தனது நாட்டுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த நிமிர்ந்த தலையுடன் விடை பெறுவதற்கு ஸ்டுவர்ட் ப்ராட் தயாராகியுள்ளார்.
முன்னதாக இந்த தொடரில் முதல் முறையாக கேப்டனாக செயல்படும் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் 5 போட்டிகளில் மொத்தமாக 15 சிக்சர்கள் அடித்து ஒரு குறிப்பிட்ட ஆஷஸ் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்திருந்தார்.
இதையும் படிங்க:இனிமேலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை யூஸ் பண்ணிக்கோங்க – இளம்வீரரை எண்ணி ரசிகர்கள் வருத்தம்
அந்த வரிசையில் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற தம்முடைய தற்போதைய பயிற்சியாளர் மற்றும் நியூஸிலாந்து ஜாம்பவான் ப்ரெண்டன் மெக்கல்லம் சாதனையையும் தகர்த்துள்ள அவர் புதிய உலக சாதனையும் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. பென் ஸ்டோக்ஸ் : 15, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023*
2. ப்ரெண்டன் மெக்கல்லம் : 13, பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
3. சர் விவ் ரிச்சர்ட்ஸ் : 12, இங்கிலாந்துக்கு எதிராக, 1986
4. வாசிம் அக்ரம் : 12, ஜிம்பாப்பேவுக்கு எதிராக, 1996
5. மிஸ்பா-உல்-ஹக் : 12, இங்கிலாந்துக்கு எதிராக, 2015