ஆஷஸ் 2025 – 26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தை நன்றாக பந்து வீசிய ஆஸ்திரேலியா 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது.
அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 52, ஓலி போப் 46, ஜேமி ஸ்மித் 33 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை எடுத்து தம்முடைய சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காண்பிக்கும் வகையில் இங்கிலாந்தும் அபாரமாக பந்து வீசியது.
ஸ்டோக்ஸ் வரலாற்றுச் சாதனை:
அதற்கு பதில் சொல்ல முடியாத ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவுக்கு லபுஸ்ஷேன் 9, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 17, உஸ்மான் கவாஜா 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26, கேமரூன் க்ரீன் 24, டிராவிஸ் ஹெட் 21 ரன்கள் எடுத்தார்கள்.
மறுபுறம் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை சுருட்டிய இங்கிலாந்து 40 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது. அந்த அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5, பிரைடன் கார்ஸ் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கட்டுகளை சாய்த்தார்கள். குறிப்பாக கேப்டன் ஸ்டோக்ஸ் வெறும் 6 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஆஸ்திரேலியா திணறல்:
அதன் வாயிலாக நூற்றாண்டு சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் சிறந்த பந்து வீச்சை (5-23) பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இதற்கு முன் 1936ஆம் ஆண்டு காபா மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அப்போதைய இங்கிலாந்து கேப்டன் குப்பி ஆலன் 36 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. தற்போது அந்த 89 வருட சாதனையை ஸ்டோக்ஸ் உடைத்துள்ளார்.
இதையும் படிங்க: தோனிக்கு பின் வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்.. 2வது டெஸ்டில் 2 மாற்றங்கள் செய்து பேட்டி
இதைத்தொடர்ந்து 40 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இங்கிலாந்து சற்று முன் வரை 100+ ரன்களை முன்னிலையாகப் பெற்றுள்ளது. அதன் காரணமாக இப்போட்டியில் ஆஸ்திரேலியா மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்றே சொல்லலாம். பட் கமின்ஸ், ஹேசல்வுட் ஆகியோர் காயத்தால் விளையாடாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்து வருகிறது.



