ஆஸ்திரேலியாவில் ஆஷெஸ் 2025-26 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் முதல் 3 போட்டிகளில் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றது. அதையும் சேர்த்து தொடர்ந்து 15வது வருடமாக இங்கிலாந்தை தங்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா கௌரவமிக்க ஆஷெஸ் கோப்பையை வென்றது.
மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவில் வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து தொடர்ந்து 15வது வருடமாக தோற்றது. இருப்பினும் 4வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஒய்ட்வாஸ் அவமானத் தோல்வியிலிருந்து தப்பியது. அது மட்டுமின்றி 15 வருடங்கள் கழித்து 16 தொடர் தோல்விகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து நிம்மதி பெருமூச்சு பெற்றுள்ளது.
முடிந்த வெற்றி நடை:
டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் துவங்கி வெறும் 2 நாட்களுக்குள் முடிந்த அப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு ஆஷெஸ் போட்டியில் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தோல்வியைச் சந்தித்தார். இதற்கு முன் 2017 முதல் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்மித் தலைமையில் விளையாடிய 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா 7 வெற்றிகளையும் 1 டிராவை சந்தித்திருந்தது.
ஆனால் இப்போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்ததால் பரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. மறுபுறம் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். இருப்பினும் சவாலான ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒருமுறை கூட சதமடித்ததில்லை என்பது விவாத பொருளாகவே இருந்தது.
வாழ்நாளில் முதல் முறை:
அதை இம்முறை காபாவில் நடைபெற்ற 2வது போட்டியில் சதமடித்து உடைத்த ஜோ ரூட் தன்னை தரமான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். அந்த நிலைமையில் இப்போட்டியில் இங்கிலாந்து வென்றதன் வாயிலாக ஜோ ரூட் தனது வாழ்நாளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றியைக் கண்டுள்ளார். 2013 முதல் ஆஸ்திரேலியாவில் விளையாடிய 18 போட்டிகளில் 15 தோல்வி 2 டிராவை சந்தித்த அவர் இப்போது தான் முதல் முறையாக வெற்றியைக் கண்டுள்ளார்.
இதையும் படிங்க: காயமடைந்த சுப்மன் கில் மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புகிறார்? வெளியான உறுதியான தகவல்
அதே போல இங்கிலாந்தின் மகத்தான ஆல் ரவுண்டராக அறியப்படும் பென் ஸ்டோக்ஸ் இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த 12 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்த அவர் தற்போது முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு வெற்றியைக் கண்டுள்ளார். அதை இங்கிலாந்தின் கேப்டனாக அவர் பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.



