இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா சதமடித்து, 141 ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டுக்கெட் அதிரடியாக விளையாடி வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். இருப்பினும் எதிர்ப்புறம் 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக பேட்டிங் செய்த ஜாக் கிராவ்லியை அவுட்டாக்கிய அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார்.
உண்மையான அதிரடி:
அந்த நிலையில் வந்த ஓலி போப் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பென் டுக்கெட் விரைவாக சதமடித்தார். நேரம் செல்ல செல்ல தொடர்ந்து இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் வெளுத்து வாங்கிய அவர் வெறும் 88 பந்துகளில் 100 ரன்கள் தொட்டார். இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இங்கிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்தார்.
இதற்கு முன் கடந்த 1990ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முன்னாள் வீரர் கிரஹாம் கூச் 95 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் 34 வருட சாதனையை உடைத்த அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஓலி போப் 39 ரன்கள் எடுத்திருந்த போது சிராஜ் வேகத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் நிறைவுக்கு வந்த இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து 207/2 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணிக்கு களத்தில் பென் டுக்கெட் 133*, ஜோ ரூட் 9* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இந்த தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆரம்ப முதலே எச்சரித்து வரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சற்று மெதுவான பேட்டிங்கையே வெளிப்படுத்திய வந்தனர். ஆனால் இந்த போட்டியில் முதல் முறையாக உண்மையான பஸ்பால் ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டுக்கெட் 21 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வார்னே மற்றும் கும்ப்ளேவை தாண்டி 2 ஆவது வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – தமிழகவீரர் அஷ்வின்
அதனால் இரண்டாவது நாள் முடிவில் இன்னும் இந்தியாவை விட 238 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள இங்கிலாந்துக்கு கைவசம் 8 விக்கெட்கள் இருக்கிறது. எனவே மூன்றாவது நாளில் இதே போல அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அந்த அணி முன்னிலை பெறுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.