கேப்டன்ஷிப் விஷயத்தில் கோலி தான் அந்த முடிவை எடுத்தார், நாங்க என்ன செய்ய முடியும் – பிசிசிஐ நிர்வாகி கருத்து

Kohli
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் நட்சத்திர கேப்டன் எம்எஸ் தோனிக்கு பின் 2014இல் சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக தர வரிசையில் 7-வது இடத்தில் திண்டாடிக் கொண்டிருந்த இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தனது ஆக்ரோஷம் நிறைந்த அதிரடியான கேப்டன்சிப் வாயிலாக 2016 முதல் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்தார். அதனால் 2017இல் வெள்ளைப் பந்து கேப்டன்சிப் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்த தோனி அவரது தலைமையில் சாதாரண வீரராக விளையாடினார். அந்த வகையில் 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி தலைமையில் சக்கை போடு போட்ட இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

kohli

- Advertisement -

இருப்பினும் உலக கோப்பையை வென்று தரவில்லை என்பதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த அவர் 2019க்குப்பின் சதமடிக்காததால் அதற்கும் சேர்த்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதுபோக ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வெல்லாத அவருக்கு பதிலாக 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க விரும்பிய பிசிசிஐ விராட் கோலிக்கு மறைமுகமான அழுத்தம் கொடுத்து வந்தது. அதனாலேயே பணிச்சுமை காரணமாக கடந்த 2021 டி20 உலகக் கோப்பையை வென்றாலும் வெல்லாவிட்டாலும் டி20 கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகுவதாக முன்கூட்டியே அறிவித்த விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாக அறிவித்திருந்தார்.

பிசிசிஐயின் அதிரடி:
அந்த நிலைமையில் நடந்த டி20 உலக கோப்பையில் அவரது தலைமையிலான இந்தியா பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் நடையை கட்டியது. அதனால் அவரின் கேப்டன்ஷிப் மீது மேலும் அதிருப்தியடைந்த பிசிசிஐ 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக ரோகித் சர்மா தலைமையிலான அணியை உருவாக்க நினைத்தது. அதற்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்பதைக் காரணமாகக் காட்டி விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை அதிரடியாக பறித்த பிசிசிஐ அதை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

Ganguly

அதில் பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் தலையீடும் இருந்தது தெரியவந்தது. அதனால் மனமுடைந்த அவர் 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய கேப்டன் மட்டுமல்லாது ஆசிய கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்திருந்த போதிலும் வெளி உலகிற்கு பணிச்சுமையை கரணமாக காட்டி கடந்த ஜனவரியில் டெஸ்ட் கேப்டன் பதவியையும் ரசிகர்கள் அதிர்ச்சியடையும் வகையில் ராஜினாமா செய்தார்.

- Advertisement -

அவர்தான் போனாரு:
ஆனால் அவருக்கு பின் பொறுப்பேற்ற கேப்டன் ரோகித் சர்மா இதுவரை தொடர்ச்சியாக அனைத்து தொடர்களிலும் பங்கேற்க முடியாமல் திணறுகிறார். சொல்லப்போனால் விராட் கோலி ராஜினாமா செய்த கடந்த 7 மாதங்களில் வரலாற்றில் முதல் முறையாக 7 வெவ்வேறு கேப்டன்கள் இந்தியாவை வழி நடத்தியுள்ளார்கள். இதிலிருந்து விராட் கோலியை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கிய பிசிசிஐயின் முடிவு தவறாகவே அமைந்து வருகிறது. இந்நிலையில் விராட் கோலி தான் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகி சென்றார் நாங்கள் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் முற்றிலும் தலைகீழான கருத்தை தெரிவித்துள்ளார்.

Arun-Dhumal-and-Virat-Kohli

இது பற்றி சமீபத்திய யூடியூப் பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் பொறுப்பை பொறுத்தவரை அது முற்றிலும் அவரது முடிவாகும். இனிமேல் நான் கேப்டன்ஷிப் செய்ய விரும்பவில்லை என்று அவர் எங்களிடம் கூறிவிட்டார். அந்த முடிவை அவர் டி20 உலகக்கோப்பைக்கு பின்பு எடுத்திருக்கலாம் என நிறைய பேர் கருதினார்கள். ஆனால் அது முற்றிலும் அவரின் முடிவாகும். இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பங்காற்றியுள்ளதால் அவரின் முடிவை நாங்களும் மதித்தோம். இந்திய கிரிக்கெட்டுக்கு ஏராளமான பங்காற்றியுள்ள அவரை வாரியம் மதிக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவிக்கும் விராட் கோலி அணியிலிருந்து நீக்குமாறு எழுந்துள்ள கோரிக்கைகள் பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “முதலில் விராட் கோலி சாதாரண வீரர் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஆனால் பார்ம் காரணமாக அவரை பிசிசிஐ ஒதுக்க நினைக்கிறது என்று ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மையல்ல என்பதுடன் எங்களையும் பாதிக்காது.

இதையும் படிங்க : அஷ்வின் சிறப்பாக செயல்பட்டாலும் டி20 உ.கோ விளையாட அந்த குறையை சரிசெய்ய வேண்டும் – முன்னாள் வீரர் வார்னிங்

நாங்கள் அனைவரும் அவர் பார்முக்கு திரும்ப வேண்டும் என்றே விரும்புகிறோம். மேலும் அணியில் அவரை தேர்வு செய்யும் முடிவை தேர்வுக்குழுவினர் எடுப்பார்கள் என்பதால் அதைப்பற்றி நாங்கள் எப்படி பேச முடியும்” என்று கூறினார்.

Advertisement