ஐபிஎல் 2025 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் வெற்றிகரமான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் தடை காரணமாக மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாத பரிதாபத்தை சந்தித்துள்ளார்.
அதாவது கடந்த வருடம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் மும்பை 3 போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை. குறிப்பாக தங்களது கடைசி லீக் போட்டியில் 3வது முறையாக மும்பை தாமதமாக பந்து வீசியது. அதனால் ஏற்கனவே 3 முறை அபராதத்தை மட்டும் சந்தித்த பாண்டியாவுக்கு 3வது முறையில் 30 லட்சம் அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
பாண்டியாவுக்கு தடை:
அந்தப் போட்டி தற்போது சென்னைக்கு எதிராக வர உள்ளது. அதன் காரணமாக தமக்கு பதிலாக சூரியகுமார் மும்பை அணியை வழி நடத்துவார் என்று பாண்டியா அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விதிமுறையை மறுபரிசலனை செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஏனெனில் பௌலர்கள் மெதுவாக வீசுவதற்காக கேப்டனுக்கு மட்டும் அபராதமும் தடையும் விதிப்பது நியாயமற்றதாக பார்க்கப்படுகிறது.
எனவே இனிமேல் ஐபிஎல் தொடரில் மெதுவாக பவுலிங் செய்யும் அணிகளின் கேப்டன்களுக்கு கருப்பு புள்ளிகள் மற்றும் அபராதத்தை மட்டும் கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் மெதுவாக பௌலிங் செய்யும் அணி கேப்டன்களுக்கு ஐசிசி இந்த விதிமுறையை பின்பற்றி தண்டனையை கொடுத்து வருகிறது. அதில் மெதுவாக பௌலிங் செய்யும் அணியின் கேப்டன்களுக்கு லெவல் 1 விதிமுறையை மட்டும் மீறும் பட்சத்தில் 25 – 75% வரை போட்டி சம்பளத்திலிருந்து அபராதம் மட்டும் விதிக்கப்படும்.
பிசிசிஐ மாற்றம்:
அத்துடன் கணிசமான ஓரிரு கருப்பு புள்ளிகள் தண்டனையாக வழங்கப்படும். லெவல் 2 விதிமுறையை மீறும் பட்சத்தில் அபராதத்துடன் 4 கருப்பு புள்ளிகள் தண்டனையாக வழங்கப்படும். இந்த கருப்பு 3 வருடங்கள் வரை அந்த வீரரின் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். அது உச்ச வரம்பை தொடும் போது மட்டுமே ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும்.
இதையும் படிங்க: இந்தியாவுக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுப்பேன்.. அந்த ஃபார்மட்டில் சான்ஸ் கொடுங்க.. வெங்கடேஷ் கோரிக்கை
இந்த விதிமுறையை பின்பற்றுகையில் மெதுவாக பவுலிங் செய்வதற்காக தடை விதிக்கப்படுவதற்கு 90% வாய்ப்புகள் குறைவாகவே ஏற்படும். சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி பின்பற்றும் அந்த விதிமுறையை தற்போது பிசிசிஐயும் பின்பற்றவுள்ளது. அது இந்த ஐபிஎல் தொடரிலிருந்து அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



