புஜாராவின் கேரியர் முடிந்ததா? மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க முடியாதா – பிசிசிஐ பதில் இதோ

pujara
- Advertisement -

ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்திப்பதற்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் பேட்டிங் துறையில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராகவே செயல்பட்ட நிலையில் மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டுள்ளதாக ஜாம்பவான் சுனில் காவாஸ்கர் விமர்சித்தார். சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இல்லாததால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற நோக்கத்தில் புஜாரா மட்டும் ஒவ்வொரு முறையும் இப்படி பலி கிடாவாக கழற்றி விடப்படுவதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

முன்னதாக 2010இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான புஜாரா மெதுவாக விளையாடியதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை இழந்த போதிலும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இடத்தை நிரப்பும் அளவுக்கு களத்தில் நங்கூரமாக நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுவலர்களை களைப்படையை வைத்து ரன்கள் குவிக்கும் ஸ்டைலை கொண்டுள்ளார். அந்த யுக்தியில் பெரும்பாலும் வெற்றிகரமாகவே செயல்பட்ட அவர் 2019/20 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

கேரியர் முடிந்ததா:
அதே போல 2020/21 தொடரிலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு பாறையை போல் உடம்பில் அடி வாங்கி முக்கிய ரன்களை எடுத்து வெற்றிகளில் பங்காற்றிய அவர் 2019க்குப்பின் சதமடிக்காத காரணத்தால் கடந்த 2022 பிப்ரவரியில் இதே போல அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாடி பெரிய ரன்களை குவித்து கடந்த ஜூலை மாதமே கம்பேக் கொடுத்த அவர் டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்து கடந்த பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 100 போட்டிகளில் விளையாடி சாதனையும் படைத்தார்.

அதை தொடர்ந்து கவுண்டி தொடரில் விளையாடிய நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் மீண்டும் ஃபைனலில் சொதப்பியதால் தற்போது நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தற்போது 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ள நிலையில் அவருடைய கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2வது வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிய அவர் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மீண்டும் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் புஜாரா மீண்டும் இந்தியாவுக்கு விளையாடுவது கடினம் என்றாலும் அதற்காக அவருக்கான கதவு மூடப்பட்டு கேரியர் முடிந்ததாக அர்த்தமில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. குறிப்பாக இதே போன்ற நிலைமையில் ரகானே 15 மாதங்கள் கழித்து நேரடியாக ஃபைனலில் தேர்வானது போல் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் புஜாரா மீண்டும் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. மேலும் அனுபவம் தேவை என்ற காரணத்தாலேயே விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் மொத்தமாக கழற்றி விடப்படவில்லை என்பதும் தெரிகிறது.

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக 15 மாதங்கள் வரை அணிக்கு வெளியே இருந்த ரகானே கம்பேக் கொடுத்து இன்று துணை கேப்டனாக உருவெடுத்துள்ளதை போல யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்காக திரும்ப விளையாட முடியும். அதாவது எந்த சீனியர் வீரருக்கும் இந்திய அணியில் விளையாடுவதற்கான கதவு மூடப்படவில்லை. இருப்பினும் இது அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான நேரமாகும்”

இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பதில் தாமதம் ஏன் தெரியுமா? – இவர்தான் புதிய கேப்டனாம்

“அதற்காக ஒரே சமயத்தில் அனைத்து சீனியர் வீரர்களும் அணியை விட்டு வெளியேறும் சூழ்நிலையை தேர்வுக்குழு விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் இல்லாமல் போய்விட்டால் நம்முடைய அணியில் அனுபவம் இல்லாமல் போய்விடும்” என்று கூறினார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்டதும் துலீப் கோப்பையில் விளையாடுவதற்காக பயிற்சி எடுக்கும் வீடியோவை வெளியிட்ட புஜாரா மீண்டும் கம்பேக் கொடுக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement