நீங்களே அப்படி செய்தால் இளம் வீரர்கள் செய்யாமல் இருப்பார்களா – சௌரவ் கங்குலி மீது கெளதம் கம்பீர் அதிருப்தி

Sourav Ganguly Gautam Gambhir
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டு என்பது கடந்த 145 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை கண்டு அபரித வளர்ச்சி பெற்றுள்ளது. அதிலும் நவீன கிரிக்கெட் விளையாட்டாக மட்டுமல்லாமல் வியாபாரமாக மாறியுள்ளதை தெளிவாக பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக ஒரு காலத்தில் சம்பளத்தை பற்றி கவலைப்படாமல் நாட்டுக்காக விளையாடுவதை பெருமையாக கொண்ட வீரர்கள் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் 2 மாதங்களில் விளையாட கிடைக்கும் கோடிக்கணக்கான சம்பளத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். அதைவிட களம், வீரர்கள், விளம்பரங்கள் என்பதை தாண்டி இந்த நவீன கிரிக்கெட் ரசிகர்களையும் மிக நெருக்கமாக சென்றடைந்துள்ளது. அதாவது ஒரு காலத்தில் கனவு அணியை முன்னாள் வீரர்கள் அல்லது ஐசிசி வெளியிடுவது வழக்கமாகும்.

அதையே வியாபாரமாக மாற்றிய சில நிறுவனங்கள் ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது 2 அணிகளின் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கனவு அணியை உருவாக்கி அதற்கு சற்று பணம் செலுத்தி இதர ரசிகர்களுடன் போட்டி போட வைக்கிறார்கள். அதில் அதிர்ஷ்டத்துடன் ரசிகர்கள் நினைப்பது போல் நடந்தால் இறுதியில் நிறைய புள்ளிகளைப் பெற்று லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பரிசு கிடைக்கும். ஆனால் பாதிக்கும் மேற்பட்ட தருணங்களில் கட்டிய பணம் கூட திரும்ப வராத பரிதாப நிலையே நிதர்சனமாக உள்ளது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் இப்போதெல்லாம் ஒரு போட்டி நடைபெறும் போது “ட்ரீம் 11 லெவன்” அணியை உருவாக்கி பணம் கட்டி பெரிய தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகர்களே கிடையாது எனலாம்.

- Advertisement -

எதிர்க்கும் கம்பீர்:
சூதாட்டம் கிடையாது என்றாலும் கிட்டத்தட்ட அதற்கு நிகராக கணிப்பை மையப்படுத்திய இந்த விளையாட்டில் ஏற்கனவே ஏழ்மையில் தவிப்பதால் அதிலிருந்து எப்படியாவது விடுபட்டு விடமாட்டோமா என்ற ஆசையுடன் விளையாடும் நிறைய ரசிகர்களுக்கு பெரும்பாலும் இழப்பே மிஞ்சுகிறது. லட்சம் மற்றும் கோடிகளில் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் பெரும்பாலான தருணங்களில் பெரும்பாலான ரசிகர்களுக்கு கட்டிய தொகை கூட கிடைப்பது கடினமாகி விடுகிறது.

இதற்கு தோனி முதல் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா வரை பெரும்பாலான இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் தோன்றி ஆதரவு கொடுப்பதால் எதைப்பற்றியும் கவலைப்படாத ரசிகர்கள் தைரியமாக இந்த விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அதிலும் பிசிசிஐ தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலியே அதுபோன்ற சில கம்பெனிகளுக்காக விளம்பரங்களில் நடித்து வருகிறார். ஆனால் பிசிசிஐ தலைவரே அப்படி செய்வது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் ரசிகர்களின் வாழ்வை கேள்விக் குறியாக்கக் கூடிய அந்த விளம்பரங்களில் இந்திய வீரர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது. “பிசிசிஐ தலைவரே (கங்குலி) அதை செய்யும் போது இதர வீரர்கள் அதை செய்ய மாட்டார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை அவர் இதை யாரும் செய்யக்கூடாது என்று வீரர்களுக்கு உத்தரவிட்டால் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த உத்தரவு மேலே இருந்து வரவேண்டும். அது இந்திய அல்லது வெளிநாட்டு கம்பெனியாக இருந்தாலும் இந்திய வீரர்களை அனுமதிக்கக் கூடாது. ஐபிஎல் தொடரில் பெரும்பாலான ஸ்பான்சர்ஷிப் ட்ரீம் லெவன் போன்ற நிறுவனங்களிடமிருந்து வருகிறது. அதனால் இதை நாம் அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி பிசிசிஐ யோசித்து சிறந்த முடிவெடுக்க வேண்டும்”

“ஒருமுறை அந்த வகையான கம்பெனி தங்களது விளம்பரத்தில் நடிக்குமாறு தினேஷ் கார்த்திக்கை அணுகியதாக கேள்விப்பட்டேன். அது என்ன கம்பெனி என்று எனக்கு தெரியாது என்றாலும் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க ஒப்புதல் கொடுக்கக்கூடாது. நானும் ஒரு முறை அவ்வாறு செய்தேன். அப்போது ரசிகர்கள் வென்றால் அவர்களுக்கு அதை பணமாக நீங்கள் கொடுப்பீர்களா என்று அந்த நிறுவன உரிமையாளரிடம் கேட்டேன்”

இதையும் படிங்க : பெயரை பார்க்காமல் திறமைக்கு மதிப்பு கொடுங்க, பண்ட் – சாம்சன் தேர்வில் தேர்வுக்குழுவை விளாசும் முன்னாள் பாக் வீரர்

“அதற்கு பணமாக வழங்க மாட்டோம் மாறாக பரிசுப் பொருட்களை வழங்குவோம் என்று அவர் தெரிவித்தார். அதனால் ஒரு வருடத்துடன் காலாவதியான அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நான் புதுப்பிக்கவில்லை. பொதுவாக இது போன்ற கனவு அணிகளில் நான் நம்பிக்கை வைப்பதில்லை. நான் எப்போதுமே இது போன்ற வாழ்க்கையை கெடுக்கும் விளம்பரங்களுக்கு எதிரானவன். குறிப்பாக இந்தியாவில் இருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து நீங்கள் பார்க்கும் போது இவற்றை அனுமதிக்க மாட்டீர்கள்” என்று கூறினார்.

Advertisement