
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் செயல்பட்டு வந்த ஜெய் சா தற்போது ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அதனால் காலியாக உள்ள செயலாளர் பதவிக்கு தேவஜித் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் கிரிக்கெட்டில் பெரிய அளவில் அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் 1990 – 1991 காலகட்டங்களில் அவர் விக்கெட் கீப்பராக வெறும் 4 உள்ளூர் முதல் தர போட்டிகளில் விளையாடி 53 ரன்களை மட்டுமே எடுத்தார். இருப்பினும் 28 வயதிலேயே அவர் சட்டத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
குறிப்பாக கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தில் 28 வயதில் வழக்குரைஞராக பொறுப்பேற்ற அவர் நீண்ட காலம் செயல்பட்டார். பின்னர் வடக்கு ரயில்வே மற்றும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய உயர்ந்த துறைகளில் அவர் விளையாட்டு துறையின் வாயிலாக முக்கிய பொறுப்புகளை பெற்றார். அதைத்தொடர்ந்து 2016 முதல் அசாம் மாநில வாரியத்தில் 6 முறை சைக்கியா அவர்கள் துணை தலைவராக செயல்பட்டார்.
2019 முதல் அசாம் வாரியத்தின் செயலாளராக செயல்பட்டு வந்த அவர் தற்போது பிசிசிஐ அமைப்பின் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது தமக்கு ஏமாற்றமளிப்பதாக சைக்கியா கூறியுள்ளார். எனவே வல்லுனர்களிடம் தேவையான கருத்துக்களை கேட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் தேவையான மாற்றங்கள் நிகழ்த்தப்படும் என்று அவர் உறுதி தெரிவித்துள்ளார்.
இது பற்றி மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகப்பெரிய சவால். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நம்முடைய அணி கடந்த 2 தொடர்களில் நன்றாக செயல்படவில்லை. அந்த நிலையில் உடனடியாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரும் சாம்பியன்ஸ் ட்ராபிபையும் வந்து விட்டது”
இதையும் படிங்க: பஞ்சாப் கேப்டனாக தோனி, ரோஹித் கூட செய்யாத சாதனையை.. நிகழ்த்தவிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்
“எனவே ஒரு நேரத்தில் ஒரு தொடரை மட்டுமே நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. அதே சமயம் கடந்த சில தினங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான விஷயங்களை நாங்கள் விவாதித்தோம். அதற்காக வல்லுனர்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளோம். அதிலிருந்து நேர்மறையான கருத்துக்களை எடுத்து நாங்கள் முன்னோக்கி செயல்பட உள்ளோம். தற்போது இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி சவால்கள் உள்ளன. இங்கிருந்து ஜெய் ஷா அவர்கள் விட்டுச் சென்ற வேலையை நான் தொடர்வேன்” எனக் கூறினார்.