விராட் கோலி, ரோஹித் சர்மா இல்ல – 2022ஆம் ஆண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட்டர்கள் இவங்க தான், பிசிசிஐ வெளியிட்ட பட்டியல் இதோ

INDia
- Advertisement -

உலகம் முழுவதிலும் கோலாகலமாக பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டை ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் அனைவரும் தங்களது வாழ்வில் வெற்றிகளை சுவைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வாழ்த்து தெரிவிக்கும் இந்த வேளையில் 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீராங்கனைகளை பிசிசிஐ பாராட்டியுள்ளது. முன்னதாக 2022இல் உச்சகட்ட தொடர்களான ஆசிய, டி20 உலக கோப்பை, மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி ஏமாற்றத்தை சந்தித்தது.

இருப்பினும் சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த வருடம் முழுவதும் தங்களது முழு திறமையையும் உழைப்பையும் வெளிப்படுத்தி நாட்டுக்காக பாடுபட்டுள்ளனர். அவர்களை கௌரவித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள பதிவை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. சிறந்த டெஸ்ட் வீரர்கள்: முதலில் கிரிக்கெட்டின் உயிர்நாடியாக போற்றப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வருடம் 7 போட்டிகளில் 4 அரை சதங்கள் 2 சதங்கள் உட்பட 680 ரன்களை 61.81 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ள ரிஷப் பண்ட் மிகச் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளதால் பிசிசிஐ வாழ்த்தியுள்ளது.

அதே போல் பந்து வீச்சு துறையில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை 20.31 என்ற சிறப்பான சராசரி எடுத்துள்ளார். குறிப்பாக 2 முறை 5 விக்கெட் ஹால் எடுத்துள்ள அவர் 2022இல் அதிக டெஸ்ட் விக்கெட்களை எடுத்து இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார். அவரையும் பிசிசிஐ வாழ்த்தியுள்ள நிலையில் தற்போது இவ்விருவருமே காயங்களை சந்தித்துள்ளதால் விரைவில் குணமடைந்து இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

- Advertisement -

2. சிறந்த ஒருநாள் வீரர்கள்: ஒருநாள் கிரிக்கெட்டில் 17 போட்டிகளில் 6 அரை சதங்கள் 1 சதம் உட்பட 774 ரன்களை 55.69 என்ற சிறப்பான சராசரியில் குவித்த ஷ்ரேயஸ் ஐயர் 2022இல் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இதர வீரர்களை காட்டிலும் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் 2022ஆம் ஆண்டின் சிறந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேனாக அசத்தியுள்ள அவரை பிசிசிஐ வாழ்த்தியுள்ளது.

அதே போல் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை 4.26 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்த முகமது சிராஜ் 2022 ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்துள்ளார். அப்படி திறமையால் 2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பவுலராக சாதித்துள்ள அவரையும் பிசிசிஐ வாழ்த்தியுள்ளது.

- Advertisement -

3. சிறந்த ஒருநாள் வீராங்கனைகள்: மகளிர் கிரிக்கெட்டில் 17 போட்டிகளில் 5 அரை சதங்கள் 2 சதங்கள் உட்பட 754 ரன்களை 58.00 என்ற சிறப்பான சராசரியில் குவித்த நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை மற்றும் கேப்டன் ஹர்மன்பிரித் கௌர் 2022ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கானையாக சாதனை படைத்துள்ளார்.

அதே போல் 17 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை 4.15 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்துள்ள ராஜேஸ்வரி கைக்வாத் 2022 மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்துள்ளார். அந்த இருவரையும் பிசிசிஐ மற்றும் ரசிகர்களும் வாழ்த்தியுள்ளார்கள்.

- Advertisement -

4. சிறந்த டி20 வீரர்கள்: தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கும் சூப்பர் ஸ்டார் ஸ்டைலை கொண்ட சூரியகுமார் யாதவ் 31 போட்டிகளில் 9 அரை சதங்கள் 2 சதங்கள் உட்பட 1164 ரன்களை 46.56 என்ற சிறப்பான சராசரியில் குவித்தார். சொல்லப்போனால் இந்தியா மட்டுமல்லாது 2022 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்த அவரை பிசிசிஐ வாழ்த்தியுள்ளது.

அதே போல் 32 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை 6.98 என்ற எக்கனாமியில் எடுத்த புவனேஸ்வர் குமார் 2022ஆம் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்து பிசிசிஐ பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

5. சிறந்த டி20 வீராங்கனைகள்: சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 23 போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 594 ரன்கள் குவித்துள்ள நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா அதிக ரன்களை குவித்த இந்திய வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்கIND vs AUS : இந்திய அணிக்கு எதிராகவும் நிச்சயம் நாங்க அதை செய்வோம் – டேவிட் வார்னர் ஓபன்டாக்

அதே போல் 25 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை 6.07 என்ற எக்கனாமியில் எடுத்த தீப்தி சர்மா அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சிறந்து விளங்கிய அந்த இருவரையும் பிசிசிஐ பாராட்டியுள்ளது.

Advertisement