
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் பதவி விலகலுக்குப் பிறகு புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறயிருக்கும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாடும் என ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது.
அப்படி கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு இந்திய அணி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும், சரிவையும் சந்தித்துள்ளது. குறிப்பாக கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐ.சி.சி சாம்பியன் டிராபி, ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் என வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது.
ஆனாலும் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை பெரியளவில் வெற்றிகளை பெறவில்லை. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால் அவரது பயிற்சியின் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அதோடு சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி இழந்தது.
அந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கௌதம் கம்பீர் நீக்கப்படலாம் என்ற ஒரு செய்தி பரவலாக அனைவரது மத்தியிலும் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் கௌதம் கம்பீரின் இந்த பதவி நீக்கம் குறித்து மௌனம் கலைத்துள்ள பிசிசிஐ செயலாளர் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : இதுதான் லாஸ்ட் சேன்ஸ்.. சிக்கலானா டி20 உலககோப்பை வாய்ப்பு பறிபோகும் – வாஷிங்டன் சுந்தரின் பரிதாப நிலை
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய மண்ணில் 140 கோடி பேர் வசிக்கின்றனர். அனைவருக்கும் இங்கு ஒவ்வொரு கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது. இது ஒரு ஜனநாயக நாடு யாரும் யாரைப் பற்றியும் பேச உரிமை உண்டு. அந்த வகையில் தான் யூகமாக கௌதம் கம்பீரின் பதவி நீக்கம் பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆனால் பிசிசிஐ அவரை பதவி நீக்குவது குறித்து எந்த ஒரு திட்டத்தையும் யோசிக்கவில்லை என்று அவர் உறுதி செய்துள்ளார்.