உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி அடங்கிய பின்னரும் இந்தியாவில் அதன் தாக்கம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த மே மாத துவக்கத்தில் இருந்தே கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கி இந்தியா முழுவதும் மக்கள் படாதபாடு பட்டு கொண்டிருக்கின்றனர். பத்தாதற்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர். இந்த விடயம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்து ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நிதியுதவிகள் குவிந்து வருகின்றன. அதேபோன்று வெளிநாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு நிதி உதவிகள் கிடைத்து வருகிறது. இந்த வேலையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ 51 கோடி ரூபாய் வழங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையிலும் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கருதிய பிசிசிஐ அமைப்பு 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது. 10 லிட்டர் கொள்ளளவு அளவு கொண்ட 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ நிர்வாகம் சார்பில் நாடு முழுவதும் வழங்க உள்ளனர். இது குறித்து கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் :
BCCI to contribute 10-Litre 2000 Oxygen concentrators to boost India’s efforts in overcoming the COVID-19 pandemic.
More details here – https://t.co/XDiP374v8q #IndiaFightsCorona pic.twitter.com/BhfX8fwirH
— BCCI (@BCCI) May 24, 2021
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மருத்துவத்துறைக்கு துணை நிற்கும் வகையில் பிசிசிஐ சில உதவிகளை செய்ய கடமைப்பட்டுள்ளது. இந்த கடினமான காலகட்டத்தில் தேசத்துடன் துணை நிற்கும் விதமாக ஆக்சிஜன் செறிவூட்டிகளை நாங்கள் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். இவை அனைத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை இருப்பவர்களுக்கு உதவும். அதன்படி 10 லிட்டர் திறன் கொண்ட 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நாங்கள் வழங்க உள்ளோம் என கங்குலி கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியின் வீரர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தங்களால் முடிந்த வரை உதவி அளித்து வரும் வேளையில் பிசிசிஐ இது போன்ற பெரிய உதவிகளை தங்கள் பங்கிற்கு தொடர்ந்து அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.