IND vs AUS : 3வது போட்டி மைதானத்தை மாற்றி சதி பண்றாங்க, மீண்டும் ஆஸி ஊடகங்கள் குற்றசாட்டு – கலாய்க்கும் டிகே, ஆகாஷ் சோப்ரா

Holkar Indore Cricket Stadium Ground
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இம்முறை இந்திய மண்ணில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு துறையில் அனலாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை வெறும் 3 நாட்களில் சுருட்டி 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

மறுபுறம் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் சந்தித்த தோல்விக்கு இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் அதற்காக ஆரம்பத்திலேயே நாக்பூர் பிட்ச் பற்றி அதிகமாக பேசிய ஆஸ்திரேலியா அதை செயலில் காட்டாமல் 177, 91 ரன்களுக்கு சுருண்டு மோசமாக செயல்பட்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

3வது போட்டியில் மாற்றம்:
அத்துடன் அதே மைதானத்தில் 400 ரன்கள் குவித்த இந்தியா ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது. அதனால் அவமானத்தை சந்தித்துள்ள ஆஸ்திரேலியா தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 2வது போட்டி பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லியில் துவங்கும் நிலையில் 3வது போட்டி மார்ச் 1ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் பின்பகுதியில் அழகான பனி மலை தொடர்களுடன் இந்தியாவிலேயே மிகவும் அழகிய மைதானமாக ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொண்டுள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த 3வது போட்டி மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் இந்தூர் நகரில் இருக்கும் ஹோல்கர் மைதானத்துக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக போட்டி துவங்குவதற்கு 15 நாட்கள் இருந்தாலும் தரம்சாலா பகுதியில் தற்போது அதிகப்படியான குளிர்காலம் நிலவுவதால் 30 யார்ட் உள் வட்டத்திற்கு வெளியே இருக்கும் மைதானப் பகுதிகளில் புற்களை வளர்ப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு 3வது போட்டி நடைபெறுவது சந்தேகம் தான் என்று சில நாட்களாகவே வெளியான செய்திகளை தற்போது பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு.

“மார்ச் 1 முதல் 5 வரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது டெஸ்ட் போட்டி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி தரம்சாலாவில் இருக்கும் எச்பிசிஏ மைதானத்திலிருந்து இந்தூர் நகரில் இருக்கும் ஹோல்கர் மைதானத்திற்கு நகர்த்தப்படுகிறது. அப்பகுதியில் கடுமையான குளிர்காலம் நிலவுவதால் களத்தில் போதுமான புல் அடர்த்தியாக இல்லை. மேலும் அது முழுமையாக வளர்ச்சியடைய சிறிது நேரம் தேவைப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தூர் மைதானத்தில் இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் 12.5 என்ற அற்புதமான பவுலிங் சராசரியை கொண்டுள்ள காரணத்தாலேயே குளிர்காலம் என்பதை பெயருக்காக காரணமாக காட்டி இப்போட்டியை தரம்சாலாவிலிருந்து நகர்த்தியுள்ளதாக பாக்ஸ் கிரிக்கெட் உள்ளிட்ட சில ஆஸ்திரேலியா ஊடகங்கள் மீண்டும் குற்றம் சாட்டுகின்றன. முன்னதாக ஏற்கனவே நாக்பூர் பிட்ச் குறிப்பிட்ட சில இடங்களில் வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக இதே ஊடகங்கள் தான் வம்பிழுத்தன.

கடைசியில் அது ஆஸ்திரேலியா அணிக்கு தான் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி தோல்வியையும் கொடுத்தது. அந்த நிலையில் இதையும் விமர்சிக்கும் ஆஸ்திரேலிய ஊடகங்களை பார்க்கும் தினேஷ் கார்த்திக், ஆகாஷ் சோப்ரா போன்ற இந்திய வீரர்களும் ரசிகர்களும் உங்களது அணிக்கு இந்தியாவை விட நீங்கள் தான் எதிரி என்று தாறுமாறாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement