அண்டர் 19 உலககோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசு தொகை அறிவித்த பிசிசிஐ – எவ்வளவு தெரியுமா?

Ganguly
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் வருங்கால வீரர்களை வெளிக்கொணரும் வண்ணம் ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் ஒருமுறை 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பையை ஐசிசி நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 14வது முறையாக மேற்கு இந்திய தீவுகளில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்த ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் நேற்று நடைபெற்று முடிந்தது.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 16 அணிகள் பங்கு பெற்ற இந்த உலக கோப்பையில் டெல்லியைச் சேர்ந்த “யாஷ் துள்” தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி வந்தது. முதலில் நடந்த லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசத்தை தோற்கடித்தது.

- Advertisement -

பைனலில் இந்தியா – இங்கிலாந்து:
இதை தொடர்ந்து வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற இந்தியா இந்த உலககோப்பையின் இறுதிப்போட்டிக்கு 8வது முறையாக தகுதி பெற்றது. இதையடுத்து நேற்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு துவங்கிய மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதை அடுத்து களமிறங்கிய அந்த அணி இந்திய பவுலர்களின் மிகத்துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணிக்கு ஜேம்ஸ் ரெவ் 95 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் பட்டய கிளப்பிய ராஜ் பாவா 5 விக்கெட்டுகளையும், ரவிகுமார் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தார்கள்.

- Advertisement -

இந்தியா சாம்பியன்:
இதை தொடர்ந்து 190 என்ற இலக்கை துரத்திய இந்தியா ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஷாய்க் ரஷீத் 50 ரன்கள், நிஷாந்த் சித்து 50* ரன்கள் போன்ற மிடில் ஆர்டர் வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 48வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிபிடித்தது. இதன் வாயிலாக இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

முன்னதாக கடந்த 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்த உலகக்கோப்பையை ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த இந்தியா 5வது முறையாக ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பையை கோப்பையை முத்தமிட்டு இந்த உலகக்கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சரித்திர சாதனை படைத்தது. இறுதி போட்டியில் 5 விக்கெட்டுகளையும் 35 ரன்களும் எடுத்து இந்தியாவின் சரித்திரம் வெற்றிக்கு வித்திட்ட ராஜ் பாவா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

பிசிசிஐ அறிவித்த பரிசு:
இந்நிலையில் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியை மனதார பாராட்டியுள்ள பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இந்த உலகக்கோப்பையில் விளையாடிய இந்திய வீரர்களுக்கு தலா 40 லட்சமும் இந்த உலக கோப்பையில் பயிற்சியாளர்களாக செயல்பட்டவர்களுக்கு தலா 25 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார். இது பற்றிய தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “அண்டர் 19 உலக கோப்பையை மிகச்சிறப்பான வழியில் வென்ற இந்திய அணி, பயிற்சியாளர் குழு மற்றும் தேர்வுக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகையான 40 லட்சம் என்பது மிகவும் சிறியதாகும். இந்த உலககோப்பையில் அவர்கள் அபாரமாக விளையாடியது விலைமதிப்பில்லாததாகும்” என தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து இந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அங்க்ரிஸ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ஷைக் ரஷீத், யாஷ் துள்(கேப்டன்), நிஷாந்த் சித்து, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தினேஷ் பானா (கீப்பர்), கௌஷல் தாம்பே, ராஜ் பாவா, விக்கி ஒஸ்த்வால், ரவி குமார், மாணவ் பரக், சித்தார்த் யாதவ், அநீஸ்வர் கவுதம், கர்வ் சங்வான் ஆகிய வீரர்கள் தலா 40 லட்சம் பரிசுத் தொகையை பெற்றுள்ளார்கள்.

இதையும் படிங்க : மைதானத்தில் நின்று திமிராக புகைபிடித்த வீரர் – தண்டனை அளிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தல்

இவர்களுடன் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் அவரது குழுவினர் ஆகியோர் தலா 25 லட்சம் பரிசுத் தொகையை பெற உள்ளார்கள்.

Advertisement