கோலியின் 100வது டெஸ்ட் : ரசிகர்களின் தொடர் கோரிக்கையால் முடிவை பின்வாங்கிய பி.சி.சி.ஐ – வெளியான நற்செய்தி

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடைபெற உள்ள நிலையில் 2-வது போட்டி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி தற்போது மொஹாலியில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Kohli practice

- Advertisement -

100வது டெஸ்டில் விராட் கோலி:
முன்னதாக இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் ஓய்வு எடுத்த நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் திரும்பியுள்ளார்கள். குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் மொகாலியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். இந்தியாவிற்காக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் எத்தனையோ சாதனைகளை செய்து பல அளப்பரிய பங்காற்றியுள்ளார். எனவே அவரின் 100வது மைல்கல் போட்டியில் அவரை கௌரவிக்க சிறப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது.

இருப்பினும் இந்தப் போட்டி பிசிசிஐ வழிகாட்டுதலின் படி ரசிகர்கள் அனுமதியின்றி மூடப்பட்ட காலி மைதானத்தில் நடைபெறும் என பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில் சமீபத்தில் கொல்கத்தாவில்நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தற்போது லக்னோ மற்றும் தரம்சாலா ஆகிய மைதானங்களில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளில் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அத்துடன் இதே டெஸ்ட் தொடரின் 2வது போட்டி நடைபெறும் பெங்களூர் மைதானத்திலும் 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் விராட் கோலி தனது 100வது போட்டியில் விளையாடும் மொகாலியில் மட்டும் ரசிகர்கள் அனுமதிக்கப்படாதது ஏன் என்று பல ரசிகர்கள் நியாயமான கேள்வியை தங்களது சமூக வலைதளங்களில் எழுப்பினார்கள்.

ட்ரெண்ட் செய்து போராடிய ரசிகர்கள்:
குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் விராட் கோலி மற்றும் பிசிசிஐ இடையே கேப்டன்ஷிப் தொடர்பாக ஏற்பட்ட மோதலால் தற்போது அவரை பிசிசிஐ இப்படி பழிவாங்குவதாக பல ரசிகர்கள் வெளிப்படையாகவே பிசிசிஐ மீது குற்றம் சாட்டினார்கள். முன்னதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பழைய அட்டவணையின்படி விராட் கோலி தனது 100ஆவது போட்டியை தமக்கு பிடித்த பெங்களூருவில் விளையாடுவதாக இருந்தார். ஆனால் அந்த அட்டவணையை திடீரென மாற்றிய பிசிசிஐ முதல் போட்டியை மொஹாலிக்கு மாற்றியது.

- Advertisement -

அப்படிப்பட்ட வேளையில் இந்தியாவுக்காக ஏராளமான ரன்கள், சாதனைகள் செய்ததுடன் கேப்டனாக தொடர்ந்து 5 வருடங்கள் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்த விராட் கோலிக்கு ரசிகர்கள் முன்னிலையில் தனது 100வது போட்டியில் விளையாட தகுதி இல்லையா என பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போராட துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தில் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் ஒன்றுகூடி “மொகாலியில் ரசிகர்களை அனுமதி” என்ற கோரிக்கையுடன் ஹேஷ்டேக் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்ய துவங்கினார்கள். போதாகுறைக்கு சுனில் கவாஸ்கர் போன்ற ஒருசில முன்னாள் ஜாம்பவான்களும் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியதால் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

Kohli-1

வெற்றி கண்ட ரசிகர்கள்:
இதை பார்த்த பொதுமக்கள் கூட பிசிசிஐக்கு எதிராக தங்களது சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதை உன்னிப்பாக கவனித்து வந்த பிசிசிஐ இனிமேலும் கெட்ட பெயர் வாங்கக்கூடாது என்பதற்காக தற்போது மொகாலியில் 50% ரசிகர்களை அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

மொத்தத்தில் நியாயமான கோரிக்கையுடன்பிசிசிஐக்கு எதிராக சாதாரண சமூக வலைதளங்களில் போராடிய இந்திய ரசிகர்கள் அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.இதையடுத்து விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் முன்னிலையில் விளையாட உள்ளார். இந்த அறிவிப்பு பற்றி பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டிக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. மாநில அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு மட்டுமே பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ தெரிவித்தது” என கூறினார்.

இதையும் படிங்க : காலம் கடந்தாச்சு! இனி புலம்புவதில் அர்த்தமில்லை, அவரை கழற்றிவிட்டது சரியான முடிவுதான் – தினேஷ் கார்த்திக்

இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை அனுமதிக்க பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் ஆன்லைன் மற்றும் மைதானங்களில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement