பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் பரிதாபமாக தோற்றது. அதற்கு முன்பாகவே ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. மேலும் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரிலும் தோல்வியை சந்தித்தது.
அடுத்ததாக நியூஸிலாந்து மண்ணில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் மீண்டும் பாகிஸ்தான் மோசமாக தோற்றது. அதற்கடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முகமது ரிஸ்வான் தலைமையில் பாபர் அசாம் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் பாகிஸ்தான் களமிறங்கியது. ஆனால் அத்தொடரில் அதை விட மோசமாக விளையாடிய பாகிஸ்தான் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
15% அபராதம்:
இதற்கிடையே அந்த 3 போட்டிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பாகிஸ்தான் பவுலிங் செய்யவில்லை. அதனால் அந்த 3 போட்டிகளிலும் தலா 5% வீதம் மொத்தம் 15% சம்பளத்தை பாகிஸ்தான் அணி ஐசிசிக்கு அபராதமாக கட்டி விட்டு நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் தக்காளி வியாபாரம் செய்பவர் கூட ஒரு நல்ல அணியை தேர்ந்தெடுப்பார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி விமர்சித்துள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் வாரியம் மற்றும் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு சரியான வீரர்களை தேர்ந்தெடுக்கத் தெரியாததால் தொடர் தோல்விகள் கிடைப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தத் தோல்விகளுக்கு பொறுப்பேற்று தேர்வுக்குழு ராஜினாமா செய்ய வேண்டும். அவர்களுக்கு எப்படி அணியை உருவாக்க வேண்டும் என்றுத் தெரியவில்லை”
தக்காளி வியாபாரி:
“சாம்பியன்ஸ் ட்ராபி முதல் தற்போது வரை தொடர்ந்து நமது அணி பிளாப் ஆகியுள்ளது. கிரிக்கெட்டை பற்றி உங்களை விட தக்காளி வியாபாரிக்கு நன்றாக தெரியும். சாம்பியன்ஸ் டிராபியில் 3 ஸ்பின்னர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை? என்று பலரும் கேட்டனர். பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் தொடர்ந்து பயிற்சியாளராக இருந்தால் நீங்கள் வங்கதேசத்திடம் மீண்டும் தோற்கும் நிலைமை வரும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அவரோட மூளை தரமா இருக்கு.. செட்டப், அணுகுமுறை எல்லாமே சிறப்பு.. குஜராத் அணியை பாராட்டிய கங்குலி
மேலும் அடுத்ததாக பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் நடைபெறுகிறது. அந்தத் தொடரை டி20க்கு பதிலாக 10 ஓவர்கள் கொண்டத் தொடராக நடத்துங்கள் என்றும் பசித் அலி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போதாவது மெதுவாக விளையாடும் பாபர் அசாம், ரிஸ்வான் வேகமாக விளையாடுகிறார்களா என்பதைப் பார்ப்போம் என்று அவர் வேதனை கூறியுள்ளார்.



