வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. ஆகஸ்ட் 25ஆம் தேதி ராவில்பிண்டி நகரில் நிறைவு பெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 448-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆனால் அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் அபாரமாக விளையாடி 565 ரன்கள் குவித்தது.
அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானை 143 ரன்களுக்கு வங்கதேசம் சுருட்டியது. இறுதியில் வெறும் 30 ரன்கள் துரத்திய அந்த அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டிப் பிடித்தது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று வங்கதேசம் புதிய சாதனை படைத்தது.
ப்ராட்மேனுக்கு என்னாச்சு:
அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாகவும் வங்கதேசம் உலக சாதனை படைத்தது. மறுபுறம் வங்கதேசத்துக்கு எதிராக டிக்ளர் செய்த பின்பும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது. அதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முன்னதாக அப்போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் பாபர் அசாம் முதல் இன்னிங்ஸில் சொந்த மண்ணில் முதல் முறையாக டக் அவுட்டானார். அதே போல 2வது இன்னிங்ஸில் 0 ரன்களில் அவர் மேட்ச் கொடுத்தார். இருப்பினும் அதை வங்கதேசம் தவற விட்டனர். ஆனால் அதை பயன்படுத்தாத பாபர் அசாம் 22 ரன்களில் அவுட்டாகி தோல்விக்கு முக்கிய காரணமானார்.
சொதப்பல் பாபர் அசாம்:
இந்நிலையில் பாகிஸ்தானின் டான் பிராட்மேனாக ரசிகர்கள் கொண்டாடும் பாபர் அசாம் போன்றவர்களுக்கு எப்படி பேட்டிங் செய்ய வேண்டும்? என்பதே மறந்து விட்டதாக முன்னாள் வீரர் பசித் அலி வேதனையுடன் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் மிகவும் ஏமாற்றமாக உணர்கிறேன். இந்த தோல்வி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் அல்லது வங்கதேசம் உங்கள் மீது ஏதோ மேஜிக் செய்து விட்டது அல்லது பிட்ச் ஏதோ சதி செய்து விட்டது என்பது போல் இருக்கிறது”
இதையும் படிங்க: என்ன நடந்துருந்தாலும் இந்திய அணியை விட்டுட்டு போய்ருக்கக் கூடாது.. கோலி மீது சஞ்சய் பங்கர் ஏமாற்றம்
“இத்தனைக்கும் நீங்கள் பெரிய பிராட்மேன் அல்லவா? ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாபர் அசாம் கேட்ச் தவற விட்ட போது அதிர்ஷ்டத்தை பெற்றார். அதன் பின் நகித் ராணா தன்னுடைய வேகத்தால் பாபர் அசாமை துரத்தினார். கடைசியில் பந்து திரும்பி வரும் என்பதை எதிர்பார்க்காதது போல் பாபர் அசாம் அவுட்டானார்” என்று கூறினார்.



