
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. சமீப காலங்களில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக விளையாடி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பாதாளத்தில் தவித்து வருகிறது என்றே சொல்லலாம்.
அதனால் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோரை கழற்றி விட்ட பாகிஸ்தான் வாரியம் சல்மான் ஆகா தலைமையில் புதிய அணியை தேர்ந்தெடுத்துள்ளது. அந்த அணி இம்முறை இந்தியாவை தோற்கடிக்கும் திறமையைக் கொண்டிருப்பதாக பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் ஆகிப் ஜாவேத் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அணி ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் இடத்தில் ஜொலித்து வருகிறது.
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். அதனால் இம்முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது. இந்நிலையில் மற்ற அணிகளை அடித்து நொறுக்கும் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் பாகிஸ்தானிடம் தடுமாறுவதாக அந்நாட்டின் முன்னாள் வீர பசித் கான் தெரிவித்துள்ளார்.
மேலும் விராட், ரோஹித் போன்ற ஜாம்பவான்கள் இல்லாதது இம்முறை அனுபவம் ரீதியாக இந்திய அணியின் பேட்டிங்கில் பலவீனம் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ரவீந்திர ஜடேஜா போன்ற ஸ்பின் ஆல் ரவுண்டர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அனைத்து வீரர்களும் உயர்தரம் வாய்ந்தவர்கள்”
“இங்கே யாரும் தரமானவர்கள் கிடையாது என்று உங்களால் சொல்ல முடியாது. ஆனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கொண்டு வரும் உயர்தரமான தீவிரத் தன்மையை ஏதோ ஒரு வகையில் இந்தியா கண்டிப்பாக மிஸ் செய்யும். சூரியகுமார் கிட்டத்தட்ட அனைத்து அணிகளுக்கு எதிராகவும் பெரிய ரன்கள் அடித்துள்ளார். ஆனால் ஏதோ ஒரு வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை”
இதையும் படிங்க: 2 மேட்ச்லயும் நாங்க தான் ஜெயிப்போம்.. பாகிஸ்தான் வீரர் திமிர் பேச்சு – வசைபாடும் ரசிகர்கள்
“அது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு காரணமாகவா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது தெரியவில்லை. ஆனால் அது பிரச்சினையாகவே இருக்கிறது. மக்கள் விராட், ரோஹித் பற்றி பேசுகிறார்கள். ஆனால் ஜடேஜா இந்திய அணி வெற்றிகரமாக திகழ்வதற்கு மிகவும் உதவினார். அக்சர் படேல் இருந்தாலும் ஜடேஜா ஒரு பேட்ஸ்மேன், பவுலர், ஃபீல்டராக சிறந்த சமநிலையைக் கொண்டு வருவார். அனைத்தையும் விட அவர் உலக கிரிக்கெட்டில் டாப் 1 அல்லது 2 ஃபீல்டர்களில் ஒருவராக இருப்பார்” என்று கூறியுள்ளார்.