குழந்தை இறந்த துக்கத்தையும் தாங்கிக்கொண்டு ரஞ்சி போட்டியில் சதம் விளாசிய வீரர் – நெகிழ்வைத்த சம்பவம்

Solanki
- Advertisement -

பல தடைகளுக்குப் பின் கடந்த ஒரு வாரமாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று என 2 பாகங்களாக நடைபெற உள்ள இந்த தொடரில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த பின்னர் நாக்அவுட் சுற்று போட்டிகள் வரும் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடைபெற உள்ளது.

Baba Abarajith Baba Indrajith Ranji Trophy 2022

- Advertisement -

இந்த தொடரில் எலைட் குரூப் ஹச் பிரிவில் இடம் தமிழ்நாடு அணிக்கு ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் டெல்லி அணிக்கு எதிராக பங்கேற்ற முதல் போட்டியை டிரா செய்த தமிழ்நாடு தனது 2-வது லீக் போட்டியில் சட்டீஸ்கர் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

சதம் அடித்த விஷ்ணு சோலங்கி:
இந்த தொடரில் பரோடா கிரிக்கெட் அணி தனது 2வது லீக் போட்டியில் சண்டிகர் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. கட்டாக் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் டாஸ் வென்ற பரோடா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சண்டிகர் தனது முதல் இன்னிங்சில் பரோடாவின் அதிரடியான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 168 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் மன்னன் வோஹ்ரா 43 ரன்கள் எடுத்தார். பரோடா சார்பில் பந்துவீச்சில் பட்டை கிளப்பிய அபிமன்யு சிங் ராஜ்புட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Vishnu Solanki

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பரோடாவிற்கு தொடக்க வீரர் ஜ்யோத்னில் சிங் 96 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ரன் அவுட்டானார். இருப்பினும் நடு வரிசையில் களமிறங்கிய விஸ்ணு சோலங்கி ஆரம்பம் முதலே நிதானமாகவும் பொறுப்புடனும் பேட்டிங் செய்து 165 பந்துகள் சந்தித்து 12 பவுண்டரிகள் உட்பட சதம் விளாசி 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பார்கவ் பட் 75 ரன்களும் அடித் சேத் 59 ரன்களும் எடுத்ததால் பரோடா தனது முதல் இன்னிங்சில் 517 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது. இதையடுத்து சண்டிகர் தனது 2வது இன்னிங்ஸில் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

- Advertisement -

குழந்தையை இழந்த விஸ்ணு சோலங்கி:
இந்நிலையில் பரோடா அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடும் விஷ்ணு சோலங்கி முதல் லீக் போட்டியில் பங்கேற்று விட்டு புவனேஸ்வர் நகரில் அடுத்த போட்டியில் பங்கேற்பதற்காக தனது சக அணி வீரர்களுடன் தங்கி இருந்தார். அப்போது தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்த பேரானந்தம் மிக்க செய்தியை கேட்ட அவருக்கு அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே மிகப் பெரிய அதிர்ச்சியான செய்தியும் காத்திருந்தது. ஆம் தமக்குப் பிறந்த அழகு செல்ல குழந்தை மிக விரைவிலேயே இறந்து விட்டதாக வந்த அந்த செய்தியால் விஷ்ணு சோலங்கி மனமுடைந்து போனார்.

ranji

தமது குழந்தை உயிரோடு இருப்பதை பார்க்கும் பாக்கியத்தை பெறாத அவர் அதன்பின் அங்கிருந்து விமானம் வாயிலாக வதோதராவுக்கு சென்று தனது குழந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார். அந்த பெருந்துயர் நிகழ்ந்த அடுத்த சில நாட்களில் தற்போது நடைபெற்று வரும் சட்டிஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அந்த மோசமான நேரத்தில் தனது குடும்பத்தினருடன் இல்லாமால் மீண்டும் தனது அணியினருடன் வந்து சேர்ந்து தற்போது பரோடா அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

நெஞ்சை உருகும் செயல்:
தமது குழந்தையை இழந்து தவிக்கும் மோசமான நேரத்திலும் தனது குடும்பத்தினருடன் இல்லாமல் தனது மாநில அணிக்காக கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் விஷ்ணு சோலங்கி எடுத்துள்ள இந்த முடிவு பலரின் நெஞ்சங்களை தொட்டுள்ளது. குறிப்பாக இந்த செய்தியை பற்றி அறிந்த செல்டன் ஜேக்சன் போன்ற ரஞ்சி கோப்பையில் விளையாடும் இதர வீரர்கள் அவருக்கு ஆறுதலையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : நாங்க நெனச்சா கண்டிப்பா பண்ணுவோம். 2ஆவது போட்டியின் டாஸிற்கு பிறகு – ரோஹித் பேசியது என்ன?

இந்த செய்தியை அறிந்த பல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விஷ்ணு சோலங்கியின் இந்த மனதை உருக்கும் செயலுக்காக அவருக்கு ஆறுதலையும் பாராட்டுகளையும் கூறிவருகிறார்கள். இப்படி ஒரு கடினமான தருணத்திலும் கிரிக்கெட் மீது உள்ள பற்று காரணமாக தனது மாநிலத்திற்காக விளையாடும் இவருக்கு விரைவில் இந்தியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்க வேண்டுமென பல ரசிகர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

Advertisement