BAN vs ENG : உலக சாம்பியன் இங்கிலாந்தை மொத்தமாக தெறிக்க விட்ட வங்கதேசம் – வரலாற்றை மாற்றி இரட்டை சரித்திர சாதனை

BAN vs ENG
- Advertisement -

2019 உலகக்கோப்பை மற்றும் 2022 டி20 உலகக் கோப்பைகளை வென்று சர்வதேச வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த சாம்பியனாக ஒரே நேரத்தில் ஜொலித்து வரும் இங்கிலாந்து கத்துக்குட்டியான வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. ஆனால் அந்தத் தொடரிலேயே கடைசி போட்டியில் வென்று ஒயிட் வாஷ் அவமான தோல்வியை தவிர்த்த வங்கதேசம் தக்க பதிலடி கொடுத்தது.

அந்த நிலைமையில் அடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது. அதே வேகத்தில் 2வது போட்டியிலும் அதிரடியான வெற்றி பெற்ற அந்த அணி இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு டி20 தொடரை வென்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து முதல் முறையாக ஒரு கிரிக்கெட் தொடரையும் வென்று புதிய சரித்திரம் படைத்தது.

- Advertisement -

இரட்டை வரலாற்று சாதனை:
அதனால் வங்கதேச ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்த நிலையில் இத்தொடரின் கடைசி சம்பிரதாய போட்டி மார்ச் 14ஆம் தேதியன்று தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் வைட் வாஷ் அவமான தோல்வியை தவிர்க்கும் எண்ணத்துடன் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தாலுக்தார் 24 (22) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட லிட்டன் தாஸ் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 73 (57) ரன்கள் குவித்து 16வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அவருடன் 2வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து தனது பங்கிற்கு அதிரடி காட்டிய நஜ்முல் சாண்டோ 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47* (36) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் வங்கதேசம் 158/2 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 159 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பிலிப் சால்ட் முதல் ஓவேரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்து அசத்திய மற்றொரு தொடக்க வீரர் டேவிட் மாலன் 2வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 6 பவுண்டர் 2 சிக்சருடன் 53 (47) ரன்கள் விளாசி 14வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் அடுத்த பந்திலேயே 4 பவுண்டரி 1 சிக்சருடன் 40 (31) ரன்கள் எடுத்திருந்த ஜோஸ் பட்லரை வங்கதேசத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மெஹதி ஹசன் ரன் அவுட்டாக்கி பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதை பயன்படுத்தி டெத் ஓவர்களில் கச்சிதமாக செயல்பட்ட வங்கதேசம் மொய்ன் அலி 9 (10), சாம் கரண் 4 (6), கிறிஸ் ஓக்ஸ் 13* (10) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கியது. அதனால் 20 ஓவர்களில் இங்கிலாந்து 142/6 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தஸ்கின் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த வெற்றியால் 3 – 0 (3) என்ற என்ற கணக்கில் இத்தொடரை வென்ற வங்கதேசம் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு கிரிக்கெட் தொடரை ஒய்ட் வாஷ் செய்து புதிய சரித்திர சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: வீடியோ : 40 மாதங்கள் என்னை தின்று விட்டது, சரியான நேரத்தில் சதமடிச்சுருக்கேன் – ராகுல் டிராவிட்டுக்கு விராட் கோலி உறுதி

அதே போல் இதற்கு முன் இந்தியா உள்ளிட்ட டாப் அணிகளுக்கு எதிராக 2 – 1 என்ற கணக்கில் மட்டுமே சில தொடர்களை வென்றுள்ள வங்கதேசம் வரலாற்றில் முதல் முறையாக முழு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு டாப் அணிக்கு எதிராக ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரை ஒய்ட் வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டு மற்றுமொரு சரித்திரத்தை படைத்துள்ளது. அப்படி கத்துக்குட்டியாக அறியப்படும் வங்கதேசம் உலக சாம்பியன் இங்கிலாந்தை அசால்டாக ஒய்ட் வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement