பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்த தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ள வங்கதேசம் அணியினர் வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறுபுறம் சமீப காலங்களாகவே தடுமாறி வரும் பாகிஸ்தான் கடைசியாக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து நியூசிலாந்து, டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெறவில்லை. மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா, இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த அந்த அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள பாகிஸ்தான் இத்தொடரில் வெற்றி பாதையில் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தயாராகி வருகிறது.
வினோத புகார்:
இந்நிலையில் வங்கதேச வீரர்கள் முதல் போட்டி நடைபெறும் ராவில்பிண்டி நகரில் உள்ளனர். அங்கு பயிற்சிகளை எடுத்த பின் அவர்கள் ஹோட்டல் அறையில் வழக்கம் போல தங்கி இருக்கின்றனர். இருப்பினும் அங்கே தங்களுக்கு வேகமான இணையதள இணைப்பு கிடைக்கவில்லை என்று வங்கதேச வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தற்சமயத்தில் வங்கதேசத்தில் பதற்றமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே தங்களுடைய குடும்பத்தினருடன் பெரும்பாலான வங்கதேச வீரர்கள் வீடியோ அழைப்பில் பேச விரும்புகின்றனர். ஆனால் ராவில்பிண்டி நகரில் போதுமான அளவுக்கு இணையதளம் வேகமாக இல்லை என்று தெரிய வருகிறது. அதனால் தங்களுக்கு வேகமான இணையதள இணைப்பை பெற்றுக் கொடுக்குமாறு அவர்கள் வங்கதேச அணி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளதாக கிரிக்கெட் பாகிஸ்தான் எனும் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அதை பாகிஸ்தான் வாரியத்திடம் வங்கதேச அணி நிர்வாகம் புகாராக கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இத்தொடர் முடியும் வரை வங்கதேச அணிக்கு ஸ்பெஷலாக வேகமான இணையதள இணைப்பை பாகிஸ்தான் வாரியம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைமையில் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் 2025 சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: 5 ஃபோர்ஸ் 10 சிக்ஸ்.. 86 பந்தில் சதம்.. தமிழக மண்ணில் கம்பேக் கொடுத்த இஷான் கிசான்.. பிசிசிஐக்கு மெசேஜ்
ஆனால் தற்போது சாதாரண இருதரப்பு தொடரிலேயே வேகமான இணையதள வசதி பாகிஸ்தானில் இல்லை என்பது தெரிய வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி பாகிஸ்தான் வெற்றிகரமாக சாம்பியன்ஸ் டிராபியை நடத்தப் போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் ஐசிசி தொடரை ஒளிபரப்புவதற்கும் அதைப் பற்றிய செய்திகளை உலகம் முழுவதிலும் கொடுப்பதற்கும் வேகமான இன்டர்நெட் அவசியமாகும். இதற்கிடையே தங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் இந்தியாவை ஒதுக்கி வைத்துவிட்டு சாம்பியன்ஸ் ட்ராபியை நடத்துவோம் என்று பாகிஸ்தான் மல்லுக் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.



