BAN vs AFG : 21ஆம் நூற்றாண்டில் சரித்திரம் படைத்த வங்கதேசம் – ஆப்கானிஸ்தானை நொறுக்கி புதிய உலக சாதனை

BAN vs AFG
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அங்கு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த சுற்று பயணத்தில் முதலாவதாக கடந்த ஜூன் 14ஆம் தேதி தலைநகர் தாக்காவில் துவங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 382 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நஜ்முல் சாண்டோ 146, ஹசன் ஜாய் 76, மெகந்தி ஹசன் 48, முஸ்தஃபிசூர் ரஹீம் 47 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்தனர்.

மறுபுறம் பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நிஜாத் மசூத் 5 விக்கெட்டுகளும் யாமின் அஹ்மத்சாய் 2 விக்கெட்களும் சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் சொந்த மண்ணில் கொஞ்சம் கூட சொதப்பாமல் துல்லியமாக பந்து வீசிய வங்கதேச பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 146 ரன்களுக்கு சுருண்டது. இப்ராஹிம் ஜாட்ரன் 6, கேப்டன் ஷாஹிதி 9, ரஹ்மத் ஷா 9 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக அப்சர் சசாய் 36 ரன்களும் நசீர் ஜமால் 35 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

மெகா வெற்றி:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக எபோதத் ஹொசைன் 4 விக்கெட்டுகளும் சோரிஃபுல் இஸ்லாம், டைஜூல் இஸ்லாம், மெஹதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 236 ரன்கள் பெரிய முன்னிலையுடன் களமிறங்கிய வங்கதேசம் 2வது இன்னிங்ஸில் முன்பை விட அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தான் பவுலர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு 425/4 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

அந்த அணிக்கு தொடக்க வீரர் ஜாய் 17 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய மற்றொரு தொடக்க வீரர் ஜாகிர் ஹாசன் 71 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். ஆனால் அவருடன் மீண்டும் அசத்தலாக செயல்பட்டு சதமடித்த நஜ்முல் சாண்டோ அடுத்ததாக வந்த மோனிமுல் ஹைட் உடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 124 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த முஸ்தஃபீசர் ரஹிம் 8 ரன்னில் அவுட்டானாலும் அடுத்ததாக வந்த கேப்டன் லிட்டன் தாஸ் தனது பங்கிற்கு 4வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 66* ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அவருடன் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்த மோனிமூல் ஹைக் 121* ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் படுமோசமாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜாகீர் கான் 2 விக்கெட்களை எடுத்தார். அதன் காரணமாக 662 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச இலக்கை நிர்ணயித்த அணி என்ற உலக சாதனையும் படைத்தது. இதற்கு முன் கடந்த 2018ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச் நகரில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து 660 ரன்கள் இலக்காக நிர்ணயித்ததே முந்தைய சாதனையாகும்.

அப்படி உலக சாதனை இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் 2வது இன்னிங்ஸில் முன்பை விட மோசமாக செயல்பட்டு பெட்டிப் பாம்பாக அடங்கி வெறும் 115 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 30 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்களை எடுத்தார். அதனால் 546 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 21ஆம் நூற்றாண்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனையும் ஆல் டைம் பட்டியலில் 3வது பெரிய வெற்றியை பதிவு செய்த அணி என்ற சரித்திரத்தையும் படைத்துள்ளது.

இதையும் படிங்க:எப்போவும் இந்தியாவும் குறை சொல்லாதீங்க, தில் இருந்தா ஜெயிச்சு காட்டுங்க – பாக் வாரியத்தை சாடிய அப்ரிடி, நடந்தது என்ன?

முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 675 ரன்கள் வித்தியாசத்திலும் (1982இல்) இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 562 ரன்கள் (1934இல்) வித்தியாசத்திலும் வென்றுள்ளன. மேலும் 21ஆம் நூற்றாண்டில் இதற்கு முன் 2018இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 492 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும்.

Advertisement