வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்கா நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்தை வெறும் 106 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா சுருட்டி வீசியது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 3, வியன் முல்தார் 3, கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் 6, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 23, பேடிங்கம் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க கீப்பர் அபாரம்:
அதனால் 72-3 என தடுமாறிய அந்த அணிக்கு ரியான் ரிக்கல்டன் 27, பிரட்ஸ்கே 0 ரன்களில் டைஜூல் இஸ்லாம் வேகத்தில் அவுட்டானார். அதன் காரணமாக 108-6 என சரிந்த தென்னாப்பிரிக்கா 250 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் கெயில் வெர்ரேயன் நங்கூரமாக விளையாடினர்.
அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த வியான் முல்தார் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடினார். அந்த வகையில் ஏழாவது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்காவை சரிவிலிருந்து காப்பாற்றியது. அதில் வியான் முல்தர் அரை சதமடித்து 54 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த கேசவ் மகாராஜ் டக் அவுட்டானார்.
வங்கதேச தடுமாற்றம்:
அடுத்து வந்த டேன் பியட் தம்முடைய பங்கிற்கு போராடி 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய வெர்ரேயன் சதமடித்து 114 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஃபெவிலியன் திரும்பினார். இதன் வாயிலாக வங்கதேசம் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஜெயிக்க இந்திய அணி கையிலெடுத்த பலே திட்டம் – விவரம் இதோ
இதற்கு முன் ஜாம்பவான் மார்க் பவுச்சர் போன்றவர்கள் கூட வங்கதேசத்தில் சதமடித்ததில்லை. அவருடைய ஆட்டத்தால் தப்பிய தென்னாப்பிரிக்கா 308 ரன்கள் குவித்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் விளையாடும் வங்கதேசம் இரண்டாவது நாள் முடிவில் 101-3 ரன்களுடன் விளையாடி வருகிறது. களத்தில் முஸ்பிகர் ரஹீம் 31*, ஹசன் ஜாய் 38* ரன்களுடன் உள்ளனர்.



