இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 1 – 0 (2) என்ற கணக்கில் தோற்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி கொழும்புவில் இருக்கும் ஆர். பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்தை சிறப்பாக பவுலிங் செய்த இலங்கை 45.5 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் எமோன் 67, தவ்ஹீத் ஹ்ரிடாய் 51, தன்சிம் ஹசன் 33* (21) ரன்கள் எடுத்து வங்கதேசத்துக்கு கை கொடுத்தார்கள்.
வங்கதேசம் அசத்தல்:
இலங்கைக்கு அதிகபட்சமாக அசித்தா பெர்னாண்டோ 4, வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்ததாக விளையாடிய இலங்கைக்கு துவக்க வீரர்கள் மதுஸ்கா 17, பதும் நிஷாங்கா 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். 3வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 56 (31) ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் அவருடன் சேர்ந்து மிகவும் மெதுவாக விளையாடிய கமிண்டு மெண்டிஸ் 33 (51) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். லோயர் மிடில் ஆர்டரில் கேப்டன் அசலங்கா 6, வெல்லலாகே 1, ஹசரங்கா 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். அதனால் ஜனித் லியனகே 78 (85) ரன்கள் எடுத்தும் 48.5 ஓவரில் இலங்கையை 232 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் செய்தது.
சாதனை வெற்றி:
அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இலங்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் கொழும்பு பிரேமாதாசா மைதானத்தில் 2003 முதல் இலங்கைக்கு எதிராக விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளில் வங்கதேசம் தொடர்ந்து 11 தோல்விகளை சந்தித்து வந்தது. அதை இப்போட்டியில் உடைத்த வங்கதேசம் எதிராக பிரேமதாசா மைதானத்தில் இலங்கைக்கு எதிராக முதல் முறையாக சாதனை வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: வெல் பிளேயிடு ஸ்டார் பாய்.. பிரின்ஸ் சுப்மன் கில்லை வாழ்த்திய கிங் கோலி – என்ன சொல்லியிருக்காரு பாருங்க
அங்கே 23 வருடங்கள் கழித்து வங்கதேசம் வெற்றி பெற தன்வீர் இஸ்லாம் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை (5/39) பதிவு செய்த வங்கதேச பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அதனால் அவர் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றார்.