ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 11ஆம் தேதி அபுதாபியில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாங்காங் 20 ஓவரில் போராடி 143/7 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக நிஷாகத் கான் 42, ஜீசன் அலி 30, கேப்டன் யாசிம் முர்டசா 28 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேச அணிக்கு டஸ்கின் அகமது, தன்ஜிம் ஹசன், ரிசாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர்கள் பர்வேஸ் ஹொசைன் 19, தன்சிட் ஹசன் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.
லிட்டன் தாஸ் அசத்தல்:
அடுத்து வந்த கேப்டன் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய தவ்ஹீத் ஹாரிடாய் நங்கூரமாக பேட்டிங் செய்து கை கொடுத்தார். அதைப் பயன்படுத்தி அதிரடி காட்டிய லிட்டன் தாஸ் அரை சதத்தை அடித்து 59 (39) ரன்களை குவித்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் ஹரிடாய் 35* (36) ரன்கள் எடுத்த உதவியுடன் 17.4 ஓவரில் 144/3 ரன்களை அடித்த வங்கதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அதனால் தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்ற வங்கதேசம் 2025 ஆசியக் கோப்பையை வெற்றிகரமாக துவங்கியது. மேலும் ஹாங்காங் அணிக்கு எதிராக முதல் முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற்று வங்கதேசம் நிம்மதியை பெற்றுள்ளது.
அவமானத்தை உடைத்த வங்கதேசம்:
வரலாற்றில் 2014 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்தை முதலும் கடைசியுமாக அதனுடைய சொந்த மண்ணில் ஹாங்காங் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் வங்கதேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங் போராடி தோற்கடித்தது. அதனால் ஹாங்காங் போன்ற மிகச்சிறிய கத்துக்குட்டி அணிக்கு எதிராக தோற்றுள்ளீர்களே என்று இப்போட்டிக்கு முன் வங்கதேசத்தை சமூக வலைத்தளங்களில் எதிரணி ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.
இதையும் படிங்க: கங்குலி போல பிசிசிஐ தலைவர் ஆகிறேனா? வெளியான செய்திகள் பற்றி சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு
இருப்பினும் இப்போட்டியில் வென்ற வங்கதேசம் அந்த அவமானத்தை உடைத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்த வெற்றிக்கு அரை சதத்தை அடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் லிட்டன் தாஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் சபீர் ரஹ்மானுக்கு பின் (2016இல் இலங்கைக்கு எதிராக) ஆசிய டி20 கோப்பையில் அரை சதத்தை அடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். மறுபுறம் அடீக் இக்பால் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஹாங்காங் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.



