
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 30-ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கே.எல் ராகுலின் தலைமையில் அண்மையில் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அந்த அணியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறாத வேளையில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவ வீரரான கே.எல் ராகுல் இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் மீண்டும் இந்த தொடரில் இடம்பிடித்து இருப்பதாலும், இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாலும் இந்த ஒருநாள் தொடரானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல் போன்ற மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு இடம் கிடைத்த வேளையில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காதது தனக்கு வருத்தமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
நான் சஞ்சு சாம்சனுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். ஏனெனில் அவர் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருக்கிறார். அதோடு அவரது ஒருநாள் போட்டிகளுக்கான சராசரி 57-ஆக இருக்கிறது. ஆனாலும் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் என்ன தவறு செய்தார்? என்பது எனக்கு புரியவில்லை. ரிஷப் பண்ட் அணியில் இருப்பதை கூட என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இதையும் படிங்க : 736 நாள் ஆச்சு.. இதெல்லாம் சரியா?.. பேசாம பும்ராவுக்கு ரிட்டயர்மென்ட் குடுத்துடுங்க – ரசிகர்கள் புலம்பல்
ஆனால் துருவ் ஜுரேல் எந்த அடிப்படையில் ஒருநாள் அணியில் இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு பதிலாக நிச்சயம் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்று இருக்கலாம். ஒவ்வொரு முறையும் சஞ்சு சாம்சனின் பெயர் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறாமல் போனது எனக்கு வருத்தமாகவே இருப்பதாகவும் பத்ரிநாத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.